மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

சட்டம் ஒழுங்கோடு சமூக ஒழுங்கையும் கவனித்த உதவி ஆணையர்!

சட்டம் ஒழுங்கோடு சமூக ஒழுங்கையும் கவனித்த உதவி ஆணையர்!

கொரோனா தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து ஊரடங்கு காலத்தில் மக்களோடு மக்களாய் எவ்வித அபாயத்தையும் எதிர்கொண்டு பணி செய்து வருகிறவர்கள் போலீஸார். தொற்று ஏற்பட்டவர்களுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் சேவை செய்கிறார்கள் என்றால், தொற்று ஏற்படா வண்ணம் தடுப்பு பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு, தொற்றுக்கு பலியாகி வருகிறார்கள் காவல்துறையினர்.

சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையராக இருந்து வந்தவர் ஈஸ்வரன். சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரனுக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த உதவி ஆணையர் ஈஸ்வரன் நேற்று(மே 13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஈஸ்வரன் காலமான செய்தி காவல்துறையும் தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியோடும் துயரத்தோடும் கவனிக்கப்படுகிறது. ஏனெனில், ஈஸ்வரன் காவல் பணியையும், தாண்டி சமூக சேவையாளராக தன்னை வடிவமைத்துக் கொண்டவர். பல்லாவரத்தில் உதவி ஆணையராக பணியாற்றுவதற்கு முன்பு வடசென்னை, வியாசர்பாடி பி.3 காவல்நிலைய சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராக ஈஸ்வரன் பணியாற்றினார்.

பொதுவாக வடசென்னையில் இன்ஸ்பெக்டர் என்றாலே கூடுதல் இறுக்கமும், கரடுமுரடும் தேவை என்ற ஒரு மனப்பான்மை பொதுப்புத்தியில் இருக்கும். ஆனால் சட்டம் ஒழுங்கோடு சமூக ஒழுங்கையும் சேர்த்து வடசென்னையை கவனித்து ஈரம் மிக்க இன்ஸ்பெக்டராக பெயரெடுத்தவர் ஈஸ்வரன்.

“வியாசர்பாடி ஆய்வாளராக ஈஸ்வரன் பணியாற்றியபோது, காவல்துறை சார்பில் குழந்தைகள் வளர்ப்பு முறை குறித்த கருத்தரங்கம் நடத்தினார். காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பல்துறை அறிஞர்கள் அதில் பங்கேற்று சிறப்பித்தனர். குழந்தைகளை நாம் ஒழுங்காக வளர்த்தாலே பின்னாட்களில் கிரிமினல்கள் உருவாவதைத் தடுக்கலாம் என்றும், ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த சமூகத்தைப் பற்றி எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் கருத்தரங்கத்தின் மூலம் பல பெற்றோர்களுக்கு பாடம் எடுத்தார் ஈஸ்வரன்.

அக்கருத்தரங்கை சகோதரர் வியாசை முரளியும், நானும் ஒருங்கிணைத்திருந்தோம். குழந்தை வளர்ப்பு மட்டுமல்ல, தான் பணியாற்றிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கவும் பல்வேறு உதவிகளைச் செய்தவர் ஈஸ்வரன். இப்படி தான் பணி செய்த இடங்களில் எல்லாம் மக்களிடம் பாராட்டு பெற்றவர் ஈஸ்வரன். இப்போது அவர் பல்லாவரத்தில் உயர் பணியில் இருந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு காலமாகிவிட்டார். இந்த செய்தி வடசென்னையில் இருக்கும் எங்களுக்கு வலிக்கிறது”என்று வேதனையோடு கூறுகிறார் வடசென்னை தமிழ் சங்க தலைவர் இளங்கோ.

”கொரோனா தொற்றால் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைந்த செய்தியறிந்து தான் மிகுந்த வேதனை அடைந்தேன். பெருந்தொற்று காலத்திலும் தன் கடமையைச் சிறப்பாக ஆற்றிய ஈஸ்வரனின் மறைவு, தமிழ்நாடு காவல்துறைக்குப் பேரிழப்பு எனவும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், காவல்துறையினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 போலீசார் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கின்றனர்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 14 மே 2021