மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

தடுப்பூசி: ஒளியும் பழங்குடிகள்... அறிவுறுத்தும் அதிகாரிகள்!

தடுப்பூசி:  ஒளியும் பழங்குடிகள்... அறிவுறுத்தும் அதிகாரிகள்!

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களைக் கண்டாலே தலைதெறிக்க காட்டுக்குள் ஓடி ஒளியும் பழங்குடிகளிடம் நம்பிக்கை அளித்து தடுப்பூசி போடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பணியர், குறும்பர், காட்டு நாயக்கர் உள்ளிட ஆறு வகையான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆறு வகை பழங்குடி மக்களின் மொத்த மக்கள் தொகையே 27,032 தான்.

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது நீலகிரியில் பழங்குடி மக்களிடம் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால், தற்போதைய இரண்டாம் அலையில் கொரோனா நோய்த்தொற்று பழங்குடிகளிடமும் வேகமாகப் பரவி வருகிறது.

குறிப்பாக கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பழங்குடிகள் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். எண்ணிக்கை அளவில் மிகக் குறைவாக உள்ள இந்த மக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் கூடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் பழங்குடிகளுக்கு முன்னுரிமை அளித்து 45 வயதுக்கு மேற்பட்ட 8,779 நபர்களுக்கு அவர்களின் கிராமங்களுக்கே சென்று முதல்கட்ட தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பூசிகளுடன் ஊருக்குள் வருவதைப் பார்த்த பெரும்பாலான பழங்குடிகள் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர். இதை அறிந்த மாவட்ட அதிகாரிகள், பழங்குடி செயற்பாட்டாளர்கள் உதவியுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட கொரோனா கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹு, “ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளுக்கு இவர்களை வரவழைத்து தடுப்பூசி செலுத்தினால் அச்சப்படுவார்கள் என்பதால், கிராமங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்தோம். மூன்று நாள்களுக்கு முன்பு முதுமலைப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சுகாதாரத்துறையினர் தடுப்பூசிகளுடன் சென்றதும், பெரும்பாலானோர் தலை தெறிக்க காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர். இவர்களிடம் படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒவ்வொருவராகத் தடுப்பூசி செலுத்தி வருகிறோம்" என்றார்.

இது குறித்து கூடலூர் பழங்குடியின செயற்பாட்டாளர்கள், “கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுகின்றன. இவற்றைத் தடுத்து, நம்பிக்கை அளிக்கும் விழிப்புணர்வு வீடியோக்களை பகிர்ந்து வருகிறோம்” என்கின்றனர்.

- ராஜ்

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வெள்ளி 14 மே 2021