மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் தடுப்பூசி போடலாமா?

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் தடுப்பூசி போடலாமா?

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் ஆறு மாதம் வரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளக் கூடாது என நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிற நிலையில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், இரண்டாம் டோஸ் செலுத்திக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். அதனால், மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளில் 70 சதவீதத்தை இரண்டாம் டோஸ் செலுத்தவே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தி கொள்வதற்கான கால இடைவெளியை 12-16 வாரங்களாக அதிகரிக்க வேண்டும். கோவாக்சின் தடுப்பூசி செலுத்த வேண்டிய கால இடைவெளியில் எந்த மாற்றமும் தேவையில்லை என நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும் இக்குழு, கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு பின்பு தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்று கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை ஆறுமாதம் வரை தள்ளி போட வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரைகள் தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். தேசிய நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியதும், இந்த பரிந்துரையை மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்தால் மட்டுமே, பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

”கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கு, முதலில் நான்கு வாரம் இடைவெளி என்றார்கள். பின்னர் 6-8 வாரமாக்கப்பட்டது. தற்போது 12-16 வாரமாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த போதிய தடுப்பூசிகள் இல்லாததால் இப்படி செய்கிறார்களா? அல்லது தொழில்முறை அறிவியல் ஆலோசனை அவ்வாறு உள்ளதா? மோடி அரசிடமிருந்து சில வெளிப்படைதன்மையை எதிர்பார்க்கலாமா? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.

-வினிதா

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

வியாழன் 13 மே 2021