மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம்!

மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம்!

நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருப்பதற்குப் பதிலாக, மருத்துவமனை வளாகத்தில் வைத்து மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை, ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் தட்டுப்பாடு போன்றவை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று(மே 13) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது.

அப்போது ஆஜரான வழக்கறிஞர் நவீன் மூர்த்தி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 9 பேர் மரணம் அடைந்ததாகவும், 30- 45 வயதினர் அதிகளவில் மரணம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து ஆஜரான வழக்கறிஞர் செந்தில் குமார், மூடப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை சென்னை கீழ்ப்பாக்கத்திலிருந்து நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு கூடுதல் கவுன்ட்டர்களுடன் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் யாருக்கும் அனுமதி மறுக்கவில்லை. மற்ற மருத்துவமனைகளிலிருந்து சிகிச்சைக்காக வந்து காத்திருந்தவர்களில் சிலர் மரணம் அடைந்துள்ளனர். உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

வழக்கறிஞர்களின் பதில்களை பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருப்பதற்கு பதிலாக மருத்துவமனை வளாகத்தில் வைத்து மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தற்காலிகமாக ஸ்ட்ரெச்சர்களை படுக்கைகளாகப் பயன்படுத்தலாம். அதுபோன்று தமிழகத்தில் செயல்பாட்டில் இல்லாத மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுவது குறித்து ஆராய வேண்டும்.

தடுப்பூசி கொள்முதலுக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் விடுத்தாலும், மத்திய அரசின் ஒதுக்கீட்டை வேறு மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது எனவும் டெண்டர் முடிவுக்கு வந்து விநியோகம் தொடங்கிய பிறகே ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த இக்கட்டான சூழலில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கூறிய நீதிபதிகள், தற்போதைய சூழலை போர்காலம் போல் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து, வழக்கு விசாரணை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

வியாழன் 13 மே 2021