மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

ஒலிம்பிக்: திட்டமிட்டபடி நடப்பது சந்தேகம்!

ஒலிம்பிக்: திட்டமிட்டபடி நடப்பது சந்தேகம்!

உலகின் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வருகிற ஆகஸ்ட் மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் இந்தப் போட்டி நடப்பது சந்தேகம்தான் என்று அந்த நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா கூறியுள்ளார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பல்வேறு நாடுகளில் மீண்டும் மீண்டும் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. ஆனாலும் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே ஜப்பான் நாட்டிலும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இதையடுத்து அங்கு சில நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஒலிம்பிக் திருவிழா ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்த முழுவீச்சில் ஏற்பாடு நடந்து வருகிறது. இதில் 200 நாடுகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் இந்த போட்டி நடப்பது சந்தேகம்தான் என்று அந்த நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா கூறியுள்ளார். நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான 23 வயதான நவோமி ஒசாகா நேற்று (மே 12) அளித்த பேட்டியில், ‘உண்மையைக் கூற வேண்டும் என்றால் தற்போதைய நிலைமையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஒரு விளையாட்டு வீராங்கனையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே விருப்பமாகும். ஆனால் ஒரு மனிதராக, நாம் இப்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இருக்கிறோம் என்றுதான் சொல்வேன். மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் இல்லாதபோது, போட்டி பாதுகாப்பானதாக இல்லை என்று உணரும்பட்சத்தில் நிச்சயம் ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கல்தான்’ என்று கூறியுள்ளார்.

மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ், கெய் நிஷிகோரி ஆகியோர் கொரோனா குறித்தும் ஒலிம்பிக் போட்டிகள் குறித்தும் தங்களது கவலையைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ்பாச் ஜப்பானின் டோக்கியோவுக்குப் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அங்கு ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும், ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு இருந்தார்.

இதற்கிடையே ஜப்பானில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் ஜப்பான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் செய்கோ கூறும்போது, “டோக்கியோ உள்ளிட்ட மற்ற பகுதிகளில் வருகிற 31ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனப்படுத்தி இருப்பதால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் சுற்றுப்பயணம் நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது. விரைவில் அவரது சுற்றுப்பயணம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

வியாழன் 13 மே 2021