மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

சாலையோர முதியவர்களுக்கு உதவும் இளைஞர்கள்!

சாலையோர முதியவர்களுக்கு உதவும் இளைஞர்கள்!

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்ற முதியவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டத்தில் முதல் இடத்தில் சென்னை உள்ளது. தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஒருபக்கம் நோயால் மக்கள் கஷ்டப்படும்போது, மற்றொரு பக்கம் வாழ்வாதாரம் இன்றி கஷ்டப்படுகின்றனர்.

இருப்பினும், உதவும் குணம் கொண்ட பலரும் இந்த பேரிடர் காலத்தில் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருவதை காண முடிகிறது.

இந்நிலையில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த ராகவேந்தர்(25) என்ற இளைஞர், தன்னுடைய நண்பர் பழனிவேலுடன் இணைந்து “வீ கேர் மயிலாப்பூர்(We Care Mylapore)” என்ற திட்டத்தின் மூலம் முதியவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ராகவேந்தர் கூறுகையில், “2017ஆம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தேன். அதன்பிறகு சில நிறுவனங்களில் வேலை பார்த்தேன். 2020 ஆம் ஆண்டு எந்த வேலையும் கிடைக்கவில்லை. பல்வேறு தோல்விகளுக்கு பிறகு கடைசியாக ஒரு ஜூஸ் கடையை ஆரம்பித்தோம். அந்த தொழிலை ஆரம்பித்து மூன்று வாரங்கள் ஆன நிலையில் , தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடை மூடப்பட்டது.

இந்த காலத்தில் மக்களுக்கு உதவி செய்யலாம் என்ற எண்ணத்தோடு ’வீ கேர் மயிலாப்பூர்’ என்ற திட்டத்தை தொடங்கினோம். மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி பகுதியில் அதிக முதியவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். இந்த கொரோனா காலத்தில் அவர்கள் வெளியே வந்து கடைகளில் வரிசையாக நின்று பொருட்களை வாங்குவது என்பது கடினம்.

அதனால், அவர்களுக்கு வேண்டிய பொருட்களை இலவசமாக டெலிவரி செய்ய முடிவு செய்தோம். அதன்படி, எங்களை தொடர்பு கொண்டு தேவையான பொருட்கள் பற்றி தகவல் கொடுத்தால், அதை வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டுக்கே சென்று வழங்கி வருகிறோம். அந்த பொருட்களுக்கான ரூபாயை மட்டும் அவர்கள் கொடுப்பார்கள். மளிகை சாமான்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருமாறு சொல்வார்கள்.

இந்த சேவையை முதியவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக செய்து வருகிறோம். மற்றவர்களுக்கும் பொருட்களை இலவசமாக டெலிவரி செய்ய வேண்டுமென்றாலும். நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம். அவர்கள் எங்களுக்கு ஏதாவது கொடுக்க விரும்பினால், கொடுக்கலாம்.

இதுதவிர, வீடு இல்லாமல் சாலையில் இருப்பவர்களுக்கு முடிந்தளவு உணவுகளை வழங்கி வருகிறோம். மெரினா கடற்கரை மற்றும் சாலையோரங்களில் ஆதரவற்ற முதியவர்கள் படுத்திருப்பதை நாங்கள் பார்த்து இருக்கிறோம். இவர்களுக்கு மதிய நேரத்தில் அந்த பகுதிகளுக்கு சென்று சாப்பாடு பொட்டலங்களை விநியோகித்து வருகிறோம். இதுபோன்று முடியாத மக்களுக்கு உதவ முயற்சி எடுத்து வருகிறோம். இந்த கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள அனைவருக்கும் உதவ விரும்புகிறோம்” என்று கூறினார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 13 மே 2021