மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

ஓராண்டு உழைப்பு, ஐந்து லட்சம் மலர்ச்செடிகள், ஆட்கள் இல்லாத ஊட்டி!

ஓராண்டு உழைப்பு, ஐந்து லட்சம் மலர்ச்செடிகள், ஆட்கள் இல்லாத ஊட்டி!

ஊட்டியில் இந்த ஆண்டு கோடை விழா நடைபெறும் என்ற நம்பிக்கையில் 300 பூங்கா ஊழியர்கள் ஓராண்டாக உழைத்த உழைப்பில் ஐந்து லட்சம் மலர்ச்செடிகள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன. ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்லும் நீலகிரி சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் பெருந்தொற்றின் கோரப்பிடியால் இரண்டாவது ஆண்டாக ஆளரவமற்று கிடக்கிறது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் கோடை விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா வருவாயைச் சார்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கண்ணீரில் தவிக்கின்றன. இந்த ஆண்டு கோடை விழா நடைபெறும் என்ற நம்பிக்கையில் நீலகிரி தோட்டக்கலைத்துறை பூங்கா பராமரிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த இந்தப் பணிகளில் பூங்கா ஊழியர்கள் சுமார் 300 பேர் மழை, பனி, குளிர் எதுவும் பாராமல் தங்களின் உழைப்பை நல்கி வந்தனர்.

இந்த நிலையில், பெருந்தொற்று பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்துள்ளதால் இந்த ஆண்டும் சுற்றுலாவுக்குத் தடை விதிக்கப்பட்டு கோடை விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், இவர்களின் உழைப்பில் உருவான ஐந்து லட்சம் மலர்ச்செடிகளிலும் பல லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவற்றைக் கண்டு ரசிக்கத்தான் ஆளில்லை என பூங்கா ஊழியர்கள் சோர்வடைந்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள பெண் ஊழியர் ஒருவர், “நாங்க மழை, பனி, காத்துன்னு எதுக்கும் கவலைப்படாம இத்தனை பூச்செடிங்களையும் குழந்தையைப்போல பாத்துக்குறோம். மே மாசத்துல இதுங்க எல்லாம் மொத்தமா பூத்து நிக்கும்போது அவ்ளோ சந்தோஷமா இருக்கும். மாடத்துல அடுக்குனதும் ஜனங்களெல்லாம் பூவைப் பாத்து சந்தோஷப்பட்டு போட்டோ எடுக்கும்போது அதைவிட சந்தோஷமா இருக்கும். ரெண்டு வருஷமா அதுக்கு விழியில்லாம போச்சு" என்றார் கவலையுடன்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர் ஒருவர், “35,000 பூந்தொட்டிகள், மலர் மாடங்கள், கண்ணாடி மாளிகை, காட்சி அரங்குகள் என 250 வகைகளில் ஐந்து லட்சம் மலர்ச்செடிகள் பூத்துள்ளன. முதல் அலையின்போது முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு மலர் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இம்முறை எப்படியென்று தெரியவில்லை" என்றார் வருத்தத்துடன்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 13 மே 2021