மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

மேட்டூர் அணை திறப்பு எப்போது?

மேட்டூர் அணை திறப்பு எப்போது?

டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை திறப்பு எப்போது என்று எதிர்பார்த்த நிலையில், ‘ஜூன் 12ஆம் தேதி திறக்கலாம்’ என வேளாண் வல்லுநர் குழு பேரவை பரிந்துரை செய்துள்ளது.

வேளாண் வல்லுநர் குழு பேரவை சார்பில் தமிழக அரசுக்கு மேட்டூர் அணை பாசனப் பகுதி பயிர் சாகுபடியும் நீர் வழங்கல் திட்டமும் என்ற பரிந்துரை கையேட்டை அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து அக்குழுவை சேர்ந்த கலைவாணன், “மேட்டூர் அணையில் தற்போது 62 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி பாசனத்துக்காக 167.25 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட வேண்டும். எனவே மொத்தமாக 229 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்துக்குக் கிடைக்கும்.

மேட்டூர் அணை நீரைக் கொண்டு தமிழகத்தில் 12 மாவட்டங்களும், காரைக்கால் பகுதியும் பயனடைகின்றன. இந்தப் பகுதியில் இந்த ஆண்டு குறுவை பட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கர், தாளடியில் 3.25 லட்சம் ஏக்கர், சம்பா பருவத்தில் 11 லட்சம் ஏக்கர், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் 80,000 ஏக்கர் என மொத்தம் 18 லட்சம் ஏக்கரில் சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து நெல் பருவத்திலும் நாற்று விட்டு நடவு செய்தால் இந்த நீர் போதாது. எனவே, நிலத்தடி நீர் மற்றும் மழை நீரையும் முழுவதுமாகப் பயன்படுத்த வேண்டும். குறுவை பருவத்தில் 1.75 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய நிலத்தடி நீர் வசதி உள்ளது. மேட்டூர் அணையைத் திறப்பதற்கு முன்பாகவே இப்பரப்பில் நாற்றுவிட்டு, நடவு செய்தால் மேட்டூர் அணையில் இருந்து நீர் தேவை சுமார் 15 டி.எம்.சி. குறைகிறது.

இதேபோல, சம்பா பருவத்தில் 5 லட்சம் ஏக்கரில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் மழைநீரைக் கொண்டு, புழுதி உழவு செய்து நேரடி நெல் விதைப்பு செய்வதால், நாற்றங்கால் தயாரிப்பு, நடவு வயல் சேறு கலக்குதல் போன்றவற்றுக்கு நீர் தேவைப்படாததால் 25 டி.எம்.சி.க்கு மேல் அணை நீரை சேமிக்க முடியும். நிலத்தடி நீரையும், மழையையும் பயன்படுத்தினால், அணை நீர் 229 டி.எம்.சி.யை கொண்டு சாகுபடி செய்ய முடியும்.

எனவே நிகழாண்டு பயிர் சாகுபடி பாசனத்துக்காக மேட்டூர் அணையை இயல்பாக திறக்க வேண்டிய ஜூன் 12ஆம் தேதி திறப்பதற்கு பரிந்துரைத்துள்ளோம்” என்று கூறியவர்...

மேலும், “இதற்கு வசதியாக நிலத்தடி நீர் வசதியுள்ள இடங்களில் எல்லாம் அணையை திறப்பதற்கு முன்பாகவே குறுவை நாற்றுவிட்டு, நடவு செய்து முடித்திட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க கேட்டு கொள்ளப்படுகிறது. விவசாயிகள் முன் ஏற்பாடு செய்து செயல்பட வசதியாக அணை திறக்கும் காலத்தை முன்கூட்டியே வருகிற 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்.

நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் குறுவை சாகுபடி விவசாயிகளின் வசதிக்காக மே, ஜூன் மாதங்களில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி அணைக்கு நீர் பெற்றுத் தர வேண்டும்.

பாசன வாய்க்கால்கள், ஆறுகள், ஏரிகள் போன்றவற்றை மராமத்து செய்து சீரமைக்க, போதிய நிதி அளித்து, அணை திறப்பதற்கு முன்பாகவே பணிகளை முடித்து, பாசன திறனை உயர்த்தி அணை நீர் தேவைகளைக் குறைக்க வேண்டும்.

மழைநீரை முழுமையாகப் பயன்படுத்த, சம்பா சாகுபடி பரப்பில் 50 சதவிகிதம், நேரடி நெல் விதைப்பை செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குவதுடன், சிறப்பு முகாம் நடத்த வேளாண் துறைக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

-ராஜ்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

புதன் 12 மே 2021