மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

வடமாநிலங்களை போன்று மாறும் தமிழகம்!

வடமாநிலங்களை போன்று மாறும் தமிழகம்!

கொரோனா பரவல் காரணமாக, மருத்துவமனையில் இடம் இல்லாமல், நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருந்த நிலையில், தற்போது உடல்களை தகனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில் முதலில் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அதிகளவில் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்து வந்தன. கொரோனா பரவல் அதிகரிப்பால், மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் உயிரிழப்பு என கண் கொண்டு பார்க்க முடியாத நிலையை டெல்லி சந்தித்தது. உடல்களை எரிக்க இடம் இல்லாமல், உடல்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மொத்தமாக எரித்தல் என 24 மணி நேரமும் உடல்கள் எரிந்து கொண்டிருந்தன. அதுமட்டுமில்லாமல், உடல்களை எரிக்க நாள் கணக்கில் இறந்தவர்களின் உறவினர்கள் காத்து கிடந்தனர். இதுபோன்ற அவல நிலைகளை சந்தித்த டெல்லியில், தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

தற்போது, வடமாநிலங்களை போன்று தமிழகம் மாறி வருகிறது. நேற்று சென்னை அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாததால், 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தன. மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் இதே நிலைதான். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 298 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். சமீப காலமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மதுரை கீரைத்துறை மின் மயானத்தில் வரிசையாக பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மதுரையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 62 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதனால், சராசரி இறப்புகள், கொரோனா மற்றும் கொரோனா அல்லாத இறப்புகள் என நாளொன்றுக்கு 60 இறப்புகள் பதிவாகி வருகின்றன.

மதுரை மாநகராட்சியில் உள்ள தத்தனேரி, கீரைத்துறை மின் மயானங்களில் உடல்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. கீரைத்துறை மயானம் ரோட்டரி கிளப் சார்பில் இயக்கப்படுவதால், இரவு நேரங்களில் உடல்கள் எரிக்கப்படுவதில்லை. அதே சமயம் உடல்களை பதப்படுத்தி வைக்க குளிர்சாதன பெட்டிகளும் இல்லாததால், உடல்கள் தேங்கியுள்ளன. இங்கு நேற்று மட்டும் 45 உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுபோன்று திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் மின்மயானத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க ஆம்புலன்ஸூடன் உறவினர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஒரு உடலை எரிப்பதற்கு 2 முதல் 3 மணி நேரம் ஆவதாக உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கும் உடல்களை எரிக்க உறவினர்கள் வரிசையில் காத்துகிடக்கின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் நடப்பதாக கேள்விபட்டு கொண்டிருந்தோம். தற்போது, தமிழகத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன. அதனால், கொரோனா எனும் பெருந்தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள, மக்கள் தங்களுக்கு தங்களே சுயகட்டுப்பாடு விதித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட்டால் மட்டுமே நம்முடைய உயிரையும், நம்மை சார்ந்தவர்களின் உயிரையும் காப்பாற்ற முடியும்.

-வினிதா

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

புதன் 12 மே 2021