மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

பெண்ணின் முழு விடுதலை - வாழ்ந்து காட்டிய விஜயலட்சுமி ரமணன் - முதல் பெண்கள் 3

பெண்ணின் முழு விடுதலை - வாழ்ந்து காட்டிய விஜயலட்சுமி ரமணன்  - முதல் பெண்கள் 3

நிவேதிதா லூயிஸ்

விமானப் படையில் பெண் நட்சத்திரமாய் விஜயலட்சுமி ஒருபக்கம் ஜொலித்துக்கொண்டிருக்க, அவரது மூக்கில் மூக்குத்தியும் அழகாய் ஜொலித்துக்கொண்டிருக்கும். ராணுவப் பணியில் பெண்கள் காதில் கல் வைத்த கம்மலோ, மூக்குத்தியோ அணியக் கூடாது என்ற சட்டம் இப்போதும் உண்டு. ஆனாலும் விஜயலட்சுமியின் முகத்தில் மூக்குத்தி மின்னியது.

“அம்மா அழகாக ஆடை அணியக்கூடியவர். ஒரு போதும் மேக்கப் அணிந்தது இல்லை. ஃபோர்சஸில் இருந்துகொண்டு, ‘என்னடா இப்படி இருக்கிறார்’ என்று கூட நான் அவரைப்பற்றி நினைத்ததுண்டு. அம்மா சேலையைத் தவிர வேறு ஆடை அணிந்து நான் பார்த்தது இல்லை. இறப்பதற்கு இரண்டு வாரங்கள் முன்பு வரைகூட எப்போதும் சேலை மட்டுமே அணிந்திருந்தார். சேலைகள் என்றால் அவருக்குக் கொள்ளைப் பிரியம்” என்று சுகன்யா சொல்கிறார்.

“பணிக்கான நேர்முகத் தேர்வு முடிந்ததும் ஜெனரல் செஹ்கலின் வீட்டுக்கு என் கணவர் என்னை அழைத்துச் சென்றார். பணியில் சேர்ந்த பிறகு இந்த தென்னிந்தியப் பெண்களின் மூக்குத்தி எல்லாம் நீ போடமுடியாதே என்று அவர் என்னிடம் சொல்லி சிரித்துக்கொண்டு இருந்தார். ஆனால், நான் பணியில் இருந்தவரை மூக்குத்தி அணிந்திருந்தேன். ராணுவப் பணியில் பெண்கள் காதில் கல் வைத்த கம்மலோ, மூக்குத்தியோ அணியக் கூடாது என்ற சட்டம் கூட இப்போது உண்டு. ஆனால் அப்போது நான் அவற்றை அணிய எனக்கு எந்தத் தடையும் இருந்ததில்லை” என்று ஒரு பேட்டியில் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் ராஜம்மாவின் பேட்டியை ஆமோதிப்பது போலுள்ளது விஜயலட்சுமியின் பேட்டி ஒன்று... “என்னுடன் பணியாற்றியவர்கள் நான் பணி ஓய்வு பெற்ற பிறகும் தங்கள் பிள்ளைகளின் மகப்பேறுக்கு என்னிடமே வருவார்கள். பிற சிவில் மருத்துவமனைகளில் செலவு செய்தாலும் பரவாயில்லை. ஆனால், நான்தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தவர்கள் உண்டு” என்று அதில் சொல்லியிருக்கிறார்.

இசைமுகம்

விஜயலட்சுமியின் மற்றொரு முகம் - அவரது இசை முகம்... “இசைக் குடும்ப வாரிசு நான். மூன்று நான்கு தலைமுறையாக இசைக்கலைஞர்கள் எங்கள் குடும்பத்தில் உண்டு. தியாகராஜ சிஷ்யப் பரம்பரையிலிருந்து வந்தவர்கள் நாங்கள். வீட்டிலேயே பல இசைக்கலைஞர்கள் எனக்கு பயிற்சி அளித்தார்கள். 1939ஆம் ஆண்டில் என் 15 வயது முதல் அனைத்திந்திய வானொலியில் இசை நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். வானொலியில் பக்திப் பாடல்கள் மட்டுமே பாடுவேன் என்று எழுதித்தந்து விண்ணப்பித்து, முறையாக விமானப்படையில் நிரந்தர அனுமதி வாங்கியிருந்தேன்.

1971ஆம் ஆண்டு வரை நான் பணியாற்றிய விமானப்படை நிலையங்களுக்கு அருகே இருந்த வானொலி நிலையங்கள் எல்லாவற்றிலும் பாடியிருக்கிறேன். சென்னையில் படிக்கும்போது கல்லூரியிலும், கல்லூரிகளுக்கு இடையேயான இசைப்போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகள் வென்றிருக்கிறேன். சென்னையில் மியூசிக் அகாடமி உள்ளிட்ட எல்லா முக்கிய சபாக்களிலும் பாடியிருக்கிறேன். பெங்களூருவில் நடக்கும் அத்தனை இசைக் கச்சேரிகளிலும் தலை காட்டிவிடுவேன். பெங்களூரு சபா ஒன்றில் நான் துணைத் தலைவராக இருந்திருக்கிறேன்.

சரோஜினி நாயுடு, டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தேசபக்திப் பாடல்கள் பாட வருமாறு என்னை அழைப்பார்கள். காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களில் பாடியிருக்கிறேன். காந்தி, நேரு, இந்திரா போன்ற தலைவர்கள் பேசும் சென்னைக் கூட்டங்களில் மூவர்ணக் கொடி பார்டர் போட்ட காதி சேலை அணிந்துகொண்டு மேடையில் பாடியிருக்கிறேன். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எங்கள் குடும்ப நண்பர். அவரது மகளும் மகனும் என்னுடன் கல்லூரியில் படித்தவர்கள்” என்று கூறியிருக்கிறார் விஜயலட்சுமி.

தன் அம்மா, ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் இசைத்தட்டு ஒன்று பாடி வெளியிட்டிருப்பதாக சுகன்யா நினைவுகூர்கிறார். இப்படி ராணுவப்பணி ஒருபக்கமும், இசைப்பணி மறுபக்கமும் என இயங்கிய விஜயலட்சுமியின் பன்முகத் திறமை நம்மை வியக்கவைக்கிறது.

கணவருக்குப் பின்...

1971ஆம் ஆண்டு கணவர் ரமணன் புற்றுநோய் தாக்கி இறந்துபோக, குடும்பம் திகைத்துப் போனது. “அம்மாவுக்கு மாமனார், மாமியாரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அப்பா இறந்தபோது எனக்கு 14 வயது, தம்பிக்கு 13 வயது. எங்களைப் படிக்க வைக்க வேண்டும். வேலையை விட்டுவிடலாம் என்று நினைத்து சீஃப் ஆஃப் ஏர் ஸ்டாஃபிடம் (Chief of Air Staff) அம்மா பணியை ராஜினாமா செய்துவிடுவதாகத் தெரிவித்திருக்கிறார். அப்போது அம்மாவுக்கு ஆறுதல் சொன்ன அந்த நல்ல மனிதர், அவருக்கு பெங்களூரு கமாண்ட் மருத்துவமனையிலேயே நிரந்தர கமிஷன் பணியை ஏற்பாடு செய்தார். அம்மா பணி ஓய்வு பெறும்வரை பெங்களூரு கமாண்ட் மருத்துவமனையிலேயே வேலை செய்துவந்தார்” என்று சுகன்யா நினைவுகூர்கிறார்.

போர்க்களத்திலும் பணி

நர்சிங் அதிகாரிகளுக்கு விஜயலட்சுமி வகுப்பெடுத்திருக்கிறார். 1962ஆம் ஆண்டு போர் மேகங்கள் சூழ்ந்தபோது களத்துக்குச் செல்லும் மருத்துவர்கள், செவிலியர்களைத் தேர்ந்தெடுத்து, பயிற்சி தரும் பணியைத் திறம்படச் செய்தார். 1972 ஆகஸ்ட் 22 அன்று விங் கமாண்டராகப் பதவி உயர்வு பெற்றார். 1977ஆம் ஆண்டு தன் பணிகளுக்காக விசிஷ்ட் சேவா பதக்கம் பெற்றார். 1979ஆம் ஆண்டு விங் கமாண்டர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். 2020 அக்டோபர் 18 அன்று தன் 96ஆவது வயதில் விஜயலட்சுமி காலமானார்.

விஜயலட்சுமி உருவாக்கிய வழக்கறிஞர்

தன் தாய் இறந்தபின் ஒரு நாள் தன்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய, முன்பின் அறியாத வேலாயுதன் என்ற நபர் குறித்து நெகிழ்வுடன் சுகன்யா கூறுகிறார். “குருவாயூரைச் சேர்ந்த வேலாயுதன் என்பவர் அம்மா இறந்த செய்தி கண்டு, என் எண்ணைத் தேடிப்பிடித்துப் பேசினார். செகந்திராபாத் விமானப்படை மருத்துவமனையில் ‘தியேட்டர் அசிஸ்டென்டாக’ அம்மாவிடம் அவர் பணியாற்றியிருக்கிறார். அப்போது சட்டம் படிக்க ஆர்வம் கொண்டிருந்தவரால், அங்கிருந்து வெகு தூரமிருந்த ஓஸ்மானியா பல்கலைக்கழகம் வரை தினமும் சைக்கிளில் சென்று படிப்பைத் தொடர முடியவில்லை. ‘எனக்கு எப்படியாவது ஒரு வழி செய்யுங்கள், நான் படிக்க வேண்டும்’ என்று அவர் அம்மாவிடம் வேண்டுகோள் வைக்க, அம்மாவும் அப்பாவும் அவருக்குச் சட்டக்கல்லூரி அருகே இருந்த கான்பூர் மருத்துவமனைக்குப் பணியிட மாற்றம் வாங்கித் தந்திருக்கிறார்கள். அங்கு சட்டம் பயின்ற வேலாயுதன், இப்போது குருவாயூரில் பிரபல வழக்கறிஞராகப் பணியாற்றுவதாகக் கூறி, அதற்கு முழு காரணமும் ரமணன் தம்பதிதான் என்று நெகிழ்ந்து பேசினார். அதேபோல மருத்துவமனைக்கு வந்துவிட்டால் அம்மாவுக்கு எல்லோரும் ஒன்றுதான், யாரிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை” என்று சுகன்யா சொல்கிறார்.

“என்னிடம் வந்துவிட்டால் யாரிடமும் நான் பதவியைப் பார்ப்பதில்லை, எனக்கு எல்லோரும் சமம். வெயிட்டிங் ரூம் ஒன்று உண்டு. அதில் அனைவரையும் எண் கொடுத்து அமரவைத்து விடுவேன். அவசர கேஸ் என்றால் இவர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு ஓடிவிடுவேன். திரும்பிய பின் எவ்வளவு நேரம் எடுத்தாலும், அனைத்து நோயாளிகளையும் பார்த்த பின் தான் கிளம்புவேன். ஒரு நாளுக்கு 220 வெளிநோயாளிகளுக்குக் கூட சிகிச்சை தந்தது உண்டு. நான் பணியாற்றிய பல இடங்களில் நான் மட்டுமே ஒற்றை மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றியிருக்கிறேன்.

சிகிச்சை அறையில் எந்த முடிவையும் நானே எடுக்க வேண்டும், பாடம் சொல்லித்தர வேண்டும், 24 மணி நேரமும் அழைத்தால் ஓட வேண்டும், ஆண்டு விடுமுறையிலும் இதே நிலைதான். ஒரு மருத்துவராக என் பணி எங்கு தேவைப்பட்டதோ அங்கு சிறப்பாகச் செய்தேன். 11 ஆண்டுகள் கமாண்ட் மருத்துவமனையில் சீனியர் மருத்துவராகப் பணியாற்றினேன். 80 வயது வரை தனியார் மருத்துவமனைகளில் நண்பர்களுக்காகப் பணியாற்றினேன்” என்று விஜயலட்சுமி சொல்லியிருக்கிறார்.

பெண்ணின் முழு விடுதலை

“நமக்கு முழு விடுதலை வேண்டும். பெண்களுக்கு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வேண்டும். அனைத்து மதங்களிடையேயும் ஒற்றுமை வேண்டும்; சாதிகள் ஒழிய வேண்டும். அனைவரும் சமமே என்ற புரிதல் வேண்டும். அது தான் முழு சுதந்திரம்” என்று கூறியிருக்கிறார் விஜயலட்சுமி.

“இன்றைய பெண்களில் சிலர் என்னை ரோல் மாடல் என்று சொல்கிறார்கள். மகிழ்வாக இருக்கிறது. உங்களுக்கான சரியான ரோல் மாடல்களை வரிந்து கொள்ளுங்கள். கணவர் இறந்தபின் சர்வீஸில் வேலையும் செய்து கொண்டு, குழந்தைகளை வளர்த்தெடுத்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைப்பது என்பது சவாலான வேலை. அதை நான் நன்றாகவே செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

இன்றைய பெண்களுக்கு நான் சொல்ல நினைப்பது ஒன்று தான்- எப்போதும் தளர்ந்து விடாதீர்கள். நம்மால் முடியாது என்று எதையும் நினைத்து விடாதீர்கள். கடமையைச் சிறப்பாகச் செய்யுங்கள், பலன் தானாகக் கிடைக்கும். மருத்துவருக்கும் நோயாளிக்குமிடையேயான உறவு மிகவும் முக்கியம். அவர்கள் மீது அக்கறை கொள்ளுங்கள். அவர்கள் உங்களிடமே திரும்பி வர வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்” என்றும் விஜயலட்சுமி கூறியிருக்கிறார்.

தன் அம்மாவைக் குறித்துச் சொல்லும்போது சுகன்யா இதைச் சொல்கிறார்... “நல்லது செய்தால் அது நம்மிடமே திரும்ப வரும் என்று அம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்” எத்தனை உண்மை இது...

விஜயலட்சுமி ரமணனின் வார்த்தைகளில்... ‘கடமையைச் செய், பலன் தானாக கிடைக்கும்’.

கட்டுரையாளர் குறிப்பு

நிவேதிதா லூயிஸ்... சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த "முதல் பெண்கள்" என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை" என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

தகவல் உதவி:

சுகன்யா லட்சுமி நாராயண்

ரா. விஜயசங்கர்

ராஜம்மாள் வி.ஜே.கே.நாயர்

முந்தைய பகுதிகள்

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

புதன் 12 மே 2021