மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்!

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் ஆம்புலன்ஸிலேயே நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 29,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,38,509ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 16,983 பேர் ஆண்கள், 12,289 பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 7,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவனையில் 1,62,181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 298 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இப்படி நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கும் கொரோனா தொற்றால், மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் மக்கள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது.

நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தன. மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதாலும், புதிதாக வந்த நோயாளிகள் அனைவருக்கும் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளை கொடுக்கமுடியாததாலும் நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் 16 லிட்டர் வரையிலான கொள்ளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சிலிண்டர்கள் மூலம் 5 முதல் 6 மணி நேரம் வரையில் நோயாளிகள் சுவாசிக்க முடியும் எனவும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கூறுகின்றனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும் இதே நிலைதான்.

கோயம்புத்தூர், தமிழ்நாட்டில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது மாவட்டமாகும். இங்கு படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற பிரச்சினை அதிகமாக உள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் இல்லாததால், நோயாளிகளை ஏற்றி வந்த ஆம்புலன்ஸூகள் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் காத்து இருக்கின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இதுபோன்ற இன்னல்களிலிருந்து தப்பித்து கொள்ள வேண்டுமென்றால், அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி, தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். இந்த தொற்றில் இருந்து அரசும், மருத்துவர்களும் நம்மை காப்பாற்றுவதை விட, நம்மை நாமே காப்பாற்றி கொள்வதுதான் சிறந்தது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

புதன் 12 மே 2021