மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

அம்மா...அதிகாரி... மருத்துவர்: வரலாற்றில் வாழும் விஜயலட்சுமி ரமணன்! முதல் பெண்கள்- 2

அம்மா...அதிகாரி... மருத்துவர்: வரலாற்றில் வாழும் விஜயலட்சுமி ரமணன்! முதல் பெண்கள்-  2

நிவேதிதா லூயிஸ்

விமானப் படை அதிகாரியாக பணியாற்றிய விஜயலட்சுமி ரமணனின் குழந்தைகள், குடும்பம் அழகானது.

1957ஆம் ஆண்டு மகள் சுகன்யாவும், 1958ஆம் ஆண்டு மகன் சுகுமாரும் அடுத்தடுத்து பிறந்தார்கள். குழந்தைகளை வளர்த்தெடுத்த நேரம், தேர்ந்த மருத்துவர் என்ற பெயரும் பெற்றார் விஜயலட்சுமி.. கான்பூர், செகந்தராபாத், டெல்லி, பெங்களூரு என்று நாட்டின் பல முக்கிய விமானப்படை கமாண்ட் மருத்துவமனைகளில் விஜயலட்சுமி பணியாற்றினார்.

“பல இடங்களில் நான் ஒரே பெண் என்பதால் சிறப்பு கவனம் எடுத்துக்கொண்டார்கள். என் பணிகளைச் சரியாகச் செய்யும் சூழலை ஏற்படுத்தித் தந்தார்கள். என் பணி, அதன் பலன் என எல்லாவற்றையும் பாராட்டினார்கள். எந்த இடத்திலும் என்னைப் பாரபட்சத்துடன் யாரும் நடத்தியதில்லை. என் கமாண்ட் அதிகாரி என்னிடம், ‘பெண் ஆடையில் இருக்கும் ஆண் நீ’ என்று அடிக்கடி சொல்வார். எல்லா விதமான பொறுப்புகளும் எனக்கு அளிக்கப்பட்டன; எதற்கும் நான் மறுப்பு சொன்னதேயில்லை.

எல்லாவற்றையும் விரும்பி ஏற்றுக்கொண்டு செய்தேன். அதேபோல எந்த இடத்திலும் நான் பாதுகாப்புக் குறைவாக உணர்ந்ததே இல்லை. ஒரு பார்ட்டி முடிந்து இரவு வீடு திரும்ப வேண்டும் என்றாலும் கமாண்டிங் அதிகாரி என் காருக்குப் பின்னால் வீடு வரை பாதுகாப்புக்காக யார் வண்டியையாவது அனுப்பி வைப்பார். அத்தனை கவனமாக, நட்பாக என்னிடம் இருப்பார்கள். ஒரு நல்ல குடும்பமாகவேதான் நாங்கள் இருந்தோம்” என்று தன்னுடன் பணியாற்றிய ஆண்கள், தன் பணிச் சூழல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பேட்டியில் விஜயலட்சுமி குறிப்பிட்டிருக்கிறார்.

அம்மா விஜயலட்சுமி பிள்ளைகள் பெருமிதம்

“அம்மா சிறு வயது முதலே தனித்து இயங்கியவர், விடுதலையை விரும்புபவர். 14 வயதில் அவரிடம் சொந்த கார் இருந்தது. MYO 8008 என்ற ஆஸ்டின் கார்தான் அம்மாவின் நீண்ட கால ஃபேவரைட். அந்த காரை பின்னாளில் சென்னை கார் கலெக்டர் ஒருவரிடம் அம்மா விற்றுவிட்டார். எப்போதுமே தனித்து இயங்கியதாலோ என்னவோ எங்களையும் அப்படியே வளர்த்தார். எனக்கு நினைவு தெரிந்து ஒருநாள் கூட அம்மா எங்களுக்கு பள்ளிக்குப் பையை எடுத்து வைத்ததில்லை. நாங்களேதான் எல்லாம் பேக் செய்து கொள்வோம்.”

“தினமும் காலை எட்டு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை அம்மாவுக்கு மருத்துவமனையில் வேலை இருக்கும். வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து, சமைத்து எங்களுக்கு உணவு எடுத்து வைத்துவிட்டு ஓடுவார். ஆனால் சீருடையை மடிப்பு கலையாமல் அயர்ன் செய்து அத்தனை சுத்தமாக அணிந்து செல்வார். தட்டில் என்ன இருக்கிறதோ அதை எந்த சத்தமும் இன்றி சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க எங்களைப் பழக்கியிருந்தார்” என்று சுகன்யா சொல்கிறார்.

“என் இரு குழந்தைகளும் பிறந்தபோது அவர்களைக் கவனிக்க ஆயாக்கள் உண்டு. அதன்பின் அவர்களை நான் கவனித்துக்கொண்டேன். மருத்துவரான என் மாமனார் ஓய்வுபெற்ற பிறகு, அவரும் என் மாமியாரும்தான் எனக்குப் பெரும் ஆதரவு. வீட்டில் எந்த வேலையைச் செய்வதிலும் எனக்குத் தயக்கம் இருந்ததில்லை. மருத்துவமனையிலிருந்து அழைப்பு எந்த நொடி வந்தாலும், நான் ஓடத் தயாராக இருப்பேன். என் மகன் ‘மம்மி வேலைக்குப் போகிறார்; நான் வருத்தப்படக் கூடாது’ (Mom goes to job, I shouldn’t crib) என்று சிறு வயதிலேயே சொல்லிக்கொண்டு இருப்பான். நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை என் குழந்தைகள் உணர்ந்திருந்தார்கள். அவர்கள் முழுக்க முழுக்க ‘சர்வீஸ் குழந்தைகள்’.

இரவு ஏதாவது அவசரம் என்று மருத்துவமனைக்குச் செல்வதானால் ஆம்புலன்ஸில் ஆயா ஒருவரும் என்னுடன் மருத்துவமனைக்கு வருவார். தொலைபேசியில் அழைப்பு வந்த அடுத்த நொடி என்ன நிலையில் இருந்தாலும் வீட்டு வாசலுக்கு ஓடிச்சென்று ஆம்புலன்ஸுக்காகக் காத்திருப்பேன். போகும் வழியில் மயக்க மருந்து நிபுணரையும் அழைத்துக்கொண்டே மருத்துவமனைக்குச் செல்வேன். ஒரு வேளை ஆயா இல்லை என்றால், நானே ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு அறுவை சிகிச்சை அறைக்குச் செல்வேன்” என்று ராஜ்யசபை தொலைக்காட்சிப் பேட்டியில் விஜயலட்சுமி குறிப்பிட்டிருக்கிறார்.

விமானப் படையில் முதல் பெண் சீருடை

விமானப்படையில் சேரும்போது நூதன சிக்கல் ஒன்று விஜயலட்சுமிக்கு ஏற்பட்டது. “அப்போது ராணுவத்தில் பெண்கள் அதிகமில்லை. விமானப்படை, கப்பல்படை, காலாட்படை என்று எல்லாவற்றிலும் சேர்த்தே மொத்தம் 12 பெண்கள்தான் பணியாற்றினோம். எனக்குத் தொடக்கத்தில் ஆண்களுடன் பணியாற்றுவது சற்று அச்சமாகவே இருந்தது. ஆனால் எதையும் சமாளிக்கலாம் என்ற துணிவு என்னிடம் இருந்தது. எனக்கான சீருடையை தேர்வு செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன் ஆங்கிலேய ராணுவம் பயன்படுத்திய நீல வண்ண காஷ்மீர் சில்க் உடையை எனக்கு சாம்பிளாக அனுப்பி வைத்தார்கள். ஆனால் அது பார்க்க ‘டல்லாக’, மிக மெலிதாக இருந்தது. எனக்குப் பிடித்தாற்போல அதே நிறத்தில் பெங்களூர் சில்க் துணியில் சேலையும், வெள்ளை நிற காலர் வைத்த பிளவுஸுமாக விமானப்படையின் முதல் பெண்ணுக்கான சீருடையை வடிவமைத்தேன்.

பிளவுஸுக்குத்தான் பெரும் சிக்கல் முளைத்தது. முழுக்கை சட்டை தான் விமானப்படை சீருடை. எப்போதும் அதை அணிந்துகொண்டு எப்படி மகப்பேறு பார்ப்பது? இயலாது என்று மறுத்தேன். மாற்றி மாற்றி கடிதப் போக்குவரத்து தொடர்ந்தது. முக்கால் கை வைத்துக் கொள்ளுமாறு சொன்னார்கள். அறுவை சிகிச்சை செய்வது முக்கால் கை சட்டையுடன் சாத்தியமா? அதுவும் எனக்குச் சிரமமாக இருக்கிறது என்று சொல்ல, ஒரு வழியாக முக்கால் கை சட்டை, ஆனால் அதை மடித்து விட்டுக்கொள்ளலாம் என்று அனுமதித்தார்கள்” என்று ‘தி தேவி புரொஜெக்டு’க்கு அளித்த காணொலிக் காட்சியில் விஜயலட்சுமி விளக்குகிறார்.

அம்மாவின் சீருடை

“அம்மா அவரது சீருடையை அவ்வளவு ஆசையாகப் பராமரித்து வந்தார். இப்போதும் அதை ஹாங்கரில் மாட்டி வைத்திருக்கிறேன். நீட்டாக சேலை கட்டி, அதன் மடிப்பை சட்டை காலருக்குக் கீழ் செலுத்தி, பின் செய்திருப்பார். அதற்கு மேல் அவரது ‘எபலெட்’ (Epaulette) இருக்கும். காலர் ஃப்ளாப்பில் இரு துளைகள் இருக்கும். அதில் ராணுவ மருத்துவப் பணிகளின் சின்னம் பொறித்த பித்தளைப் பின் (Brass Pin) அணிந்திருப்பார். வாரம் ஒருமுறை அம்மாவின் பிராஸ் பின்னுக்கு பாலிஷ் செய்யும் பணியை நானும், என் தம்பியும் சிறுவயதில் செய்து வந்திருக்கிறோம்” என்று சொல்கிறார் சுகன்யா.

இந்தக் காலத்தில் பிற துறைகளில் இருப்பவர்களுக்கே வீடு, வேலை, குழந்தைகள் என்று சுற்றிச் சுழன்று பணியாற்றுவது சிக்கலாக இருக்கிறதே, உங்கள் அம்மா அந்த காலத்தில் எப்படி வீட்டையும் சமாளித்து, விமானப்படை மருத்துவர் பணியையும் நேர்த்தியாகச் செய்தார்’ என்ற கேள்வியை முன்வைத்தேன்.

“அம்மா அவரது பணி, வீடு இரண்டையும் நேசித்தவர். நான் பிறந்த 40ஆவது நாள் அம்மா என்னை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பிவிட்டார். பெரும்பாலும் கமாண்ட் மருத்துவமனைகள் அருகிலேயே எங்களுக்கு வீட்டை ஏற்பாடு செய்து தந்துவிடுவார்கள். என்னதான் 8 - 2 மணிவரை வேலை என்று சொன்னாலும், அம்மா 24 மணி நேரமும் அழைத்தால் ஓட வேண்டியிருக்கும் என்பதும் ஒரு காரணம். சிறுவயதில் வீட்டில் ஓர் ஆயா இருந்தார் என்பது நினைவிருக்கிறது. ஆனால், பெரும்பாலும் நாங்கள் வளர்ந்தது எங்கள் தாத்தா பாட்டியின் அரவணைப்பில்தான். அப்பா வழி தாத்தா பாட்டிக்கு மூன்று பெண் குழந்தைகள். அம்மா மகப்பேறு மருத்துவர் என்பதால் எங்கள் வீட்டுக்கு பெரும்பாலும் அவர்கள் மகப்பேறுக்கு வந்து தங்கிவிடுவதுண்டு. அம்மாவும் அவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் கொள்வார்.

எங்கள் வீட்டில் எப்போதும் இதனால் உறவினர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அவர்களுக்கும் சேர்த்தே அம்மா வேலைகளைச் செய்து வைத்துவிட்டு ஓடுவார். மாற்றி மாற்றி அப்பாவின் சகோதரிகள், தாத்தா, பாட்டி என்று எங்களை கவனித்துக்கொள்ள பெரும் குடும்பம் அருகிருந்தது. அதனால் அம்மாவால் அவரது பணியைத் தடங்கலின்றி பார்த்துக்கொள்ள முடிந்தது” என்று சுகன்யா சொல்கிறார்.

பணிதான் எல்லாமே...

தன் ‘அம்மாவின் பணி, அப்பழுக்கற்ற பணி’ என்று சுகன்யா சொல்வதை, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் அவரிடம் மருத்துவம் செய்துகொண்ட ராஜம்மாள் ஆமோதிக்கிறார். “1993ஆம் ஆண்டில் என் மகள் மாயா கருவுற்றபோது, டாக்டர் ரமணன்தான் மகப்பேறு சிகிச்சையளிக்க வேண்டும் என்று நான் தீர்மானமாக இருந்தேன். அவரது திறமை மேல் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு. அப்போது ராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்றிருந்த அவர், எந்த தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றவில்லை.

பெங்களூரு அல்சூர் பகுதியில் குடியிருந்த அவரது வீட்டிலேயே சிகிச்சையளித்து வந்தார். அவரது வீட்டுக்கு அருகிலிருந்த நர்சிங் ஹோம் ஒன்றின் முகவரியைத் தந்து எந்த நேரம் அவசரம் என்றாலும் அங்கே சேர்ந்து கொள்ளும்படியும், தகவல் தந்தவுடன் தான் அங்கே வந்து கவனித்துக் கொள்வதாகவும் சொன்னார். அவர் பக்கா மிலிட்டரி ஆள். மிடுக்கு, நடை, பழக்கவழக்கம் என்று எல்லாவற்றிலும் ஒழுங்கும், நேர்த்தியும் அவரிடம் இருக்கும். எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பார். நோயாளியுடன் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது யாராவது அறைக்குள் நுழைந்தால் கோபம் கொள்வார்.

என்னை அறுவை சிகிச்சைக்கு அறைக்குள் கொண்டு செல்லும் முன் என் கணவரும், சகோதரனும் இன்னும் வரவில்லை, அவர்கள் வரட்டுமே என்று அவரிடம் நான் சொல்ல, ‘உனக்கு நான் தானே அறுவை சிகிச்சை செய்யப்போகிறேன்... நான் வந்துவிட்டேன், வா போகலாம்’ என்று அழைத்துச் சென்றார். ஒரு முறை மைசூரிலிருந்து பெங்களூருவுக்கு இவரிடம் சிகிச்சைக்கு வந்திருந்த கர்ப்பப்பை முழுக்க ரணமான பெண் ஒருவருக்கு அவர் சிகிச்சை அளித்து புது வாழ்க்கை தந்ததை நேரில் கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். அவருக்கு அவர் பணிதான் எல்லாமே” என்று ராஜம்மாள் நினைவுகூர்கிறார்.

விமானப் படையில் பெண் நட்சத்திரமாய் விஜயலட்சுமி ஒரு பக்கம் ஜொலித்துக்கொண்டிருக்க, அவரது மூக்கில் மூக்குத்தியும் அழகாய் ஜொலித்துக் கொண்டிருக்கும். ராணுவப் பணியில் பெண்கள் காதில் கல் வைத்த கம்மலோ, மூக்குத்தியோ அணியக் கூடாது என்ற சட்டம் கூட இப்போது உண்டு.

ஆனாலும் விஜயலட்சுமியின் முகத்தில் மூக்குத்தி மின்னியது எப்படி? அவரே சொல்கிறார்.

(நாளை தொடரும்)

கட்டுரையாளர் குறிப்பு

நிவேதிதா லூயிஸ்... சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த "முதல் பெண்கள்" என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை" என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

தகவல் உதவி:

சுகன்யா லட்சுமி நாராயண்

ரா. விஜயசங்கர்

ராஜம்மாள் வி.ஜே.கே.நாயர்

முதல் பகுதி

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

செவ்வாய் 11 மே 2021