மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

சாலையில் சாக்ஸ் விற்ற சிறுவனுக்கு உதவிய முதலமைச்சர்

சாலையில் சாக்ஸ் விற்ற சிறுவனுக்கு உதவிய முதலமைச்சர்

குடும்ப வறுமையால் சாலைகளில் சாக்ஸ் விற்ற 10 வயது சிறுவனின் கல்வி உள்ளிட்ட செலவுகளுக்கு, பஞ்சாப் முதலமைச்சர் உதவியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 10 வயது சிறுவன் வன்ஷ் சிங் டிராபிக் சிக்னல்களில் சாக்ஸ் விற்று வந்தான். சிறுவனின் தந்தை பரம் ஜித்தும் சாக்ஸ் வியாபாரி. தாய் ராணி, இல்லத்தரசி. வன்ஷுக்கு மூன்று சகோதரிகள், ஒரு மூத்த சகோதரர் இருக்கின்றனர்.

வாடகை வீட்டில் இத்தனை பேரும் வசித்து வருகின்றனர். குடும்ப வறுமையின் காரணமாக தந்தையின் தொழிலை அந்தச் சிறுவன் செய்து வந்திருக்கிறான். சில நாட்களுக்கு முன் சிறுவன் வன்ஷ் சிங் சாக்ஸ் விற்பதைக்கண்ட ஒருவர், வீடியோவாக எடுத்து அதில் சிறுவனின் நிலை குறித்துக் கேட்டார்.

அப்போது, தான் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டதாகவும், தனது குடும்பத்தைக் காப்பாற்ற உதவுவதற்காக வேலை செய்யத் தொடங்கியதாகவும் வீடியோவில் கூறி இருந்தான். அந்த வீடியோவை படமாக்கிய அந்த நபர் 50 ரூபாய் கூடுதலாகக் கொடுத்தும் வாங்க மறுத்துவிட்டான் சிறுவன் வன்ஷ்.

இந்த வீடியோ வைரலாக, அது அம்மாநில முதலமைச்சர் கவனத்துக்கும் சென்றது. இதைப் பார்த்த பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், சிறுவன் வன்ஷ் உடன் வீடியோ காலில் பேசியதுடன், அவனை மீண்டும் பள்ளியில் சேர்க்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவர்களின் குடும்பத்தின் நிலையை உணர்ந்து ரூ.2 லட்சம் உடனடி நிவாரணமாக அறிவித்திருக்கிறார். சிறுவனைப் பள்ளியில் சேரும் பொறுப்பைக் கவனிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். அவனது கல்விக்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசு ஏற்கும் என்றும் அறிவித்து அந்தக் குடும்பத்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் அமரீந்தர் சிங், சிறுவன் வன்ஷ் சிங்கின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, வீடியோ கால் அழைப்பின்போது, முதலமைச்சர், சிறுவனிடம், “கவலைப்பட வேண்டாம், நீ பள்ளிக்குத் திரும்புவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். நீ படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உனது குடும்பம் மற்றும் பிற செலவுகளைக் கவனித்துக்கொள்ள உங்கள் குடும்பத்துக்கு உதவுகிறேன்” என்று ஆறுதல் வார்த்தைகளைத் தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் உதவியுள்ள இந்தச் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

-ராஜ்

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

திங்கள் 10 மே 2021