மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

மேற்கு ஆஸ்திரேலிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீஷ் கிருஷ்ணன்.

இவர் தமிழ் மற்றும் படுகு மொழியில் பேசி அசத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கன்னேரிமூக்குப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் ஜெகதீஷ் கிருஷ்ணன். படுகு மொழி பேசும் சமூகத்தைச் சேர்ந்த 47 வயதான இவர், ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ரிவர்டன் பகுதியில் மருத்துவராகக் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அந்த நாட்டில் நடந்த மேற்கு ஆஸ்திரேலிய சட்டமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் ஜெகதீஷ் கிருஷ்ணன் பேட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், மே 6 அன்று சட்டமன்ற உறுப்பினராக ஜெகதீஷ் கிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டு தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அப்போது, தனது முதல் உரையை தனது தாய்மொழியில் பேசுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, படுகு மொழியில் பேசினார். “எங்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் அருளுடனும் ஹிரோடய்யா ஆசீர்வாதத்துடனும் மக்கள் சேவை செய்வதற்காக எனக்கு வாய்ப்பளித்தமைக்கு கோடான கோடி நன்றி” எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, “நான் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்தவன். எனவே, தமிழிலும் பேச விரும்புகிறேன்” எனத் தமிழில் தனது பேச்சை தொடர்ந்தார். “யாதும் ஊரே யாவரும் கேளிர். தமிழகத்தைச் சேர்ந்த கணியன் பூங்குன்றனார் என்ற தமிழ் கவிஞர் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய வலிமையான வார்த்தைகளைக் கூறிச் சென்றுள்ளார். இதன் அர்த்தம் என்னவென்றால், உலகம் அனைவருக்கும் பொதுவானது, அனைவரும் நம் உறவினர்களே, வேற்றுமையில் ஒற்றுமையை காண்போம்” என அனைவருக்கும் நன்றி கூறி அந்த அறிமுக உரையை அசத்தலுடன் முடித்துள்ளார். அவர் பேசி அசத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஜெகதீஷ் கிருஷ்ணன் குறித்துப் பேசிய கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்தினர், “இந்த மலை மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் பிறந்த ஜெகதீஷ் கிருஷ்ணன், ஆஸ்திரேலிய நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது எங்களுக்குப் பெருமையாக உள்ளது. அவையில் எங்களின் படுகு மற்றும் தமிழ் மொழியில் பேசியது இன்னும் பெருமையாக உள்ளது. சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டாலும், தொடர்ந்து மருத்துவப் பணியைத் தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்” என மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

ஞாயிறு 9 மே 2021