மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையைச் சேரந்த வெரோனிகா மேரி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ” தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக 50 சதவிகித படுக்கைகளை ஒதுக்கக் கோரியும், தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும்” கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று(மே 7) நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ” இந்த கொடிய தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களை நீதிமன்றம் பாராட்டுகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் 50 சதவிகித படுக்கைகளை நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் போன்ற அரசாணைகள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? அதை அரசு எவ்வாறு கண்காணிக்கிறது?

தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் அளிக்க வேண்டும்? அரசாணையை மீறுவோர் மீது எந்த பிரிவுகளின் கீழ், என்ன தண்டனை வழங்கப்படும்? அரசாணை சரியாக அமல்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்பதை கண்காணிக்க வேண்டியது யார்?

இதுவரை கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக எத்தனை புகார்கள் வந்துள்ளன? எத்தனை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தமிழக முதல்வர் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தில் எத்தனை பேர் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்றுள்ளனர்? தமிழ்நாடு அரசு ஊழியர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் எத்தனை பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்? போன்ற கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

சனி 8 மே 2021