மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

பூக்கள் விலை சரிவு; சாலையில் கொட்டப்படும் அவலம்!

பூக்கள் விலை சரிவு; சாலையில் கொட்டப்படும் அவலம்!

கொரோனா ஊரடங்கால் பூக்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டு சாலையில் கொட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுப நிகழ்ச்சிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாட்டைத் தளர்த்த வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுந்தரபெருமாள்கோவில் பகுதியில் முல்லை, ஜாதிமல்லி, மல்லி போன்ற பூக்கள் விளைச்சல் செய்யப்படுகிறது. இந்த பூக்கள் கும்பகோணம் பூ மார்க்கெட்டுக்குக் கொண்டுவரப்படுகிறது. மேலும், கும்பகோணம் பூ மார்க்கெட்டுக்கு திருச்சி, ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராயக்கோட்டை, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து முல்லை, மல்லி, ஆப்பிள் ரோஸ், செவ்வந்தி, செண்டி உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. இங்கு கொண்டு வரும் பூக்கள் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் போன்ற ஊர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

கோடைக்காலங்களில் பூக்களின் விளைச்சல் அதிக அளவில் இருக்கும். இதனால் பூக்களின் வரத்தும் அதிக அளவில் இருக்கும். பூக்களின் வரத்து அதிகமாக இருந்தால், விலையும் குறைவாக இருக்கும்.

தற்போது கொரோனா இரண்டாவது அலை தாக்கம் காரணமாக கோவில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூக்கள் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பூக்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதன்படி கும்பகோணம் பூ மார்க்கெட்டில் முல்லை, மல்லி கிலோ ரூ.60-க்கும், செண்டி கிலோ ரூ.10-க்கும், சம்பங்கி, அரளி கிலோ ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.

இதுகுறித்து பூ வியாபாரி ஒருவர் கூறுகையில், “கும்பகோணம் பூ மார்க்கெட்டுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காகக்கொண்டு வரப்படுகிறது. பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் சுப முகூர்த்த தினங்கள் அதிகளவில் இருப்பதால், இந்த மாதங்களில் கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறாமல் உள்ளது. ஒரு சில திருமணங்கள் நடைபெற்றாலும், மேடை அலங்காரம் இல்லாமல் எளிய முறையில் நடைபெறுவதால், மணமக்களுக்கு மாலைகள் மட்டுமே வாங்கி செல்கின்றனர்.

இதனால் வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்ல யாரும் முன்வருவதில்லை. இதனால், வெளியூரிலிருந்து வாங்கி வரும் பூக்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் பல ஆண்டுகளாக பூ வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை பூ இவ்வளவு குறைந்த விலைக்கு விற்கப்பட்டதில்லை. இதனால் வெளியூரிலிருந்து வரும் பூக்களுக்குப் போக்குவரத்து மற்றும் கொள்முதல் செலவு கூட எங்களுக்குக் கிடைப்பதில்லை.

இதே நிலை நீடித்தால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். எனவே தமிழக அரசு கோயில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்” என்றார்.

இதேபோல் திருமண விழாக்கள், கோயில் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளின்போது, ரோஜா மலர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதையொட்டி ஓசூரில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலும் கடந்த வாரம்வரை பட்டன் ரோஸ் ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், சுப நிகழ்ச்சிகள் குறைந்துவிட்டதாலும் பூக்களுக்கான கிராக்கி கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது 50 கிலோ எடை கொண்ட பட்டன் ரோஸ் கூடை ஒன்று 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆனால், பூக்களை வாங்குவதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் ஆர்வம் இல்லாததால் பூக்கள் விற்பனை ஆகாமல் உள்ளது. இதனால் வேதனை அடைந்த மலர் சாகுபடியாளர்கள் பட்டன் ரோஸ் உள்ளிட்ட ரோஜா மலர்களை மூட்டை, மூட்டையாக சரக்கு வாகனங்களில் ஏற்றி வந்து சாலைகளில் கொட்டி செல்வதைப் பார்க்க முடிகிறது. பூக்கள் விற்பனை இல்லாததால் மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 7 மே 2021