மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

நாடு முழுக்க இரண்டு மாதங்களுக்கு ஐந்து கிலோ உணவு பொருட்கள் இலவசம்!

நாடு முழுக்க இரண்டு மாதங்களுக்கு ஐந்து கிலோ உணவு பொருட்கள் இலவசம்!

கொரோனா பரவலால் இந்தியாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு இரண்டு மாதங்களுக்கு தலா ஐந்து கிலோ இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகுந்த வீரியத்துடன் பரவி வருகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் மடிந்தும் வருகின்றனர்.

மறுபுறம் நாட்டின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பைச் சந்தித்து வருகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளால் மக்களின் வாழ்வாதாரமும் பலத்த அடிவாங்கி வருகிறது. எனவே நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பயனாளிகள் சுமார் 79.88 லட்சம் பேருக்கு இரண்டு மாதங்களுக்கு அதாவது மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு தலா ஐந்து கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இந்தத் திட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின் மூன்றாம்கட்டத்தின் கீழ் 79.88 கோடி பேருக்கு தலா ஐந்து கிலோ உணவு பொருட்களை இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தற்போதைய ஒதுக்கீட்டு விகிதத்தின் அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியான, கோதுமை அல்லது அரிசி ஒதுக்கீட்டு அளவை உணவு மற்றும் பொது விநியோகத்துறை தீர்மானிக்கும்.

மேலும், உள்ளூர் பொது முடக்க சூழல்கள், மோசமான வானிலை ஆகியவற்றை கருத்தில்கொண்டு, பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை அனுப்பும் அல்லது விநியோகிக்கும் கால அளவை நீட்டிப்பது குறித்தும் இந்தத் துறை முடிவெடுக்கும்.

இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட உள்ள உணவு தானியங்களின் உத்தேச அளவு 80 லட்சம் டன் ஆகும். இதற்கான மானியச்செலவு ரூ.25,332.92 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி தகவல்களை மத்திய அரசு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களில், நெருக்கடிகளால் உணவு - தானியங்கள் கிடைக்காமல் எந்த ஏழை குடும்பமும் பாதிக்கப்படாது என்று கூறியுள்ள மத்திய அரசு, கொரோனாவால் ஏற்படும் பொருளாதாரச் சீர்குலைவு காரணமாக ஏழைகள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை இந்த கூடுதல் ஒதுக்கீடு சரிசெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வெள்ளி 7 மே 2021