மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

மருத்துவமனைகளில் தொடர் தீ விபத்துக்கான காரணம்!

மருத்துவமனைகளில் தொடர் தீ விபத்துக்கான காரணம்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் சூழலில் சமீப காலமாக வடமாநிலங்களில் மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்தால், சுமார் 93 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கொரோனா நோயாளிகள்.

தீயணைப்பு சோதனைகள் மற்றும் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு என்ஓசி சான்றிதழ் வழங்கப்பட்ட மருத்துவமனைகளில் தொடர்ந்து தீ விபத்து ஏற்படுவது ஏன்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 24 தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. அதில், 11 விபத்துகள் பெரியளவிலும்,13 விபத்துகள் சிறியளவிலும் ஏற்பட்டுள்ளன. இதில், பாதி சம்பவங்கள் கொரோனா இரண்டாம் அலை தொற்று மிக தீவிரமாக இருந்து வந்த கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் ஏற்பட்டவை. கடந்த இரண்டு மாதங்களில் மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர். அதில், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆறு தீ விபத்து சம்பவங்களில் 33 பேரும், குஜராத்தில் நடந்த மூன்று தீ விபத்துக்களில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போதுவரை மகாராஷ்டிராவில் 43 பேரும், குஜராத்தில் 35 பேரும் தீ விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் குஜராத்தில் பரூச் சாலையில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவமும் இதில் அடங்கும்.

மருத்துவமனை அமைப்பில் அதிகளவு அழுத்தம் கொடுப்பதே தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என தீயணைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

”கொரோனா அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் அதிகமான நோயாளிகளை அனுமதிக்கும் வகையில் படுக்கை வசதிகள், உபகரணங்கள் மற்றும் ஊழியர்களை அதிகரிக்கும் மருத்துவமனை நிர்வாகத்தால், உடனடியாக மின் வயரிங் முறையை விரிவுபடுத்த முடியாது. அதிகளவு நோயாளிகளை அனுமதிக்கும்போது மருத்துவ உபகரணங்கள் அல்லது கம்பிகள் அவற்றின் திறனைத் தாண்டி மின்னோட்டத்தை சுமக்கின்றன. பல மருத்துவமனைகளில் அதுதான் நடக்கிறது. இதனால்தான் தீ விபத்து ஏற்படுகிறது” என்று நாக்பூர் தலைமை தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர உச்சேக் கூறினார்.

மேலும், அவர், ”நாக்பூரில் உள்ள வெல் ட்ரீட் மருத்துவமனையில், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) தீ விபத்து ஏற்பட்டது. குறிப்பிட்ட அளவைவிட அதிகளவில் ஐசியூ படுக்கைகளை அனுமதித்ததே தீ விபத்துக்கான காரணம் என தீயணைப்பு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதேசமயம், இந்த மாதிரியான சூழ்நிலைகளில் எப்போதுமே ஒரு ஏசி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால், சிறு மருத்துவமனைகளில் அதுபோன்று பேக்-அப் ஏசி வைத்திருப்பதில்லை. மும்பை விஜய் வல்லப் மருத்துவமனை, சூரத் ஆயுஷ் மருத்துவமனை போன்றவற்றில் ஏசியிலிருந்து கசிவு ஏற்பட்டதனால்தான் தீ விபத்து ஏற்பட்டது. 24 மணி நேரமும் ஏசி பயன்பாட்டில் இருப்பதால், இம்மாதிரியான சம்பவஙக்ள் நடக்கிறது. ஐசியூ பிரிவில் விண்டோ ஏசிக்கு பதிலாக, காற்று கையாளுதல் அலகை(air handling units) பயன்படுத்தலாம். இது நல்ல பலனை தரும். காற்று கையாளுதல் அலகுகள் வளிமண்டலத்திலிருந்து காற்றை எடுத்து, அதை மறுசீரமைத்து கொடுக்கும். அதாவது குளிர்ந்த காற்றோ, வெப்ப காற்றோ, தேவைக்கேற்ப காற்றை மறுசீரமைத்து, அந்த அறைக்குள் காற்றை பரப்பும்” என தெரிவித்தார்.

”24 தீ விபத்து சம்பவங்களில், 13 தீ விபத்துக்கள் மருத்துவமனைகளில் ஐசியூ பிரிவில்தான் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்புவரை இந்த மருத்துவமனைகளில் உள்ள ஐசியூக்கள் 100% வரை செயல்பட்டது கிடையாது. தற்போது கொரோனா காரணமாக வென்டிலேட்டர், உபகரணங்கள், ஏர் கண்டிஷனர்கள் போன்றவை 24 x 7 என்ற முறையில் ஓய்வு இல்லாமல் பயன்பாட்டில் இருக்கின்றன. இது முழு மின் அமைப்பிலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அந்த அழுத்தம் விபத்தாக நடக்கிறது. ஏர் கண்டிஷனர்கள் 15-16 மணிநேரம் இயங்க வேண்டும். பின்னர் அது குளிரூட்டப்பட வேண்டும். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் ஏர் கண்டிஷனர்கள் இயங்க மட்டுமே செய்யப்படுகிறது. குளிரூட்டப்படுவதில்லை ”என்று மகாராஷ்டிரா தீயணைப்பு சேவைகளின் இயக்குனர் சந்தோஷ் வாரிக் கூறினார்.

கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனைகளில் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சானிடைசர், நீராவி கருவி, பிபிஇ கிட்,போன்றவை வேதியியல் பொருட்களால் செய்யப்பட்டவை. இதுபோன்ற எளிதில் தீ பிடிக்கக் கூடிய பொருள்கள் தீயை மேலும் பரப்புகின்றன என குஜராத் தீயணைப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

”மருத்துவமனையில் உள்ள ஐசியூ பிரிவில் 85 பேரை அனுமதிக்கும் அளவு மட்டுமே இடம் உள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அதிகமான நோயாளிகள் வருவதால், 85க்கு பதிலாக 100 படுக்கை வசதிகளை உருவாக்கி நோயாளிகளை அனுமதிக்கின்றனர். இதனால், அங்குள்ள மின் இணைப்புகள், மின்சார்ந்த உபகரணங்கள் மீது அழுத்தம் அதிகமாகி அதன்மூலம் தீ விபத்து ஏற்படுகிறது” என மருத்துவர் ஒருவர் கூறினார்.

வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

புதன் 5 மே 2021