மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

‘சென்னையின் ஒன் மேன் ஆர்மி’ மறைவு!

‘சென்னையின் ஒன் மேன் ஆர்மி’ மறைவு!

பிரபல சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே முறையாகப் படித்த ராமசாமி, பின்னர் பிரிட்டிஷ் இன்ஸ்டிட்யூட், மும்பை கல்வி நிறுவனத்தில் அஞ்சல்வழி மூலம் படித்து ஜவுளித்துறையில் AMIE பட்டம் பெற்றார்.

ஆரம்பத்தில், சென்னை பாரிமுனையின் முன்னால் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதில் போக்குவரத்து போலீஸாருக்கு உதவி செய்வதன் மூலம், ‘டிராஃபிக் ராமசாமி’ என்ற அடையாளத்துடன் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பொதுநலன் கருதி பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து, தானே வாதாடி பல வழக்குகளில் வெற்றியும் கண்டவர் ராமசாமி. தமிழக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

என்ஜின் பொருத்தப்பட்ட மீன் பாடி வண்டிகளுக்குத் தடை, பிளக்ஸ் பேனருக்கு தடை, சென்னையில் வரம்புமீறிக் கட்டப்படும் கட்டடங்கள், வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்படும் கட்டடங்களுக்குத் தடை எனப் பல அதிரடியான தீர்ப்புகளுக்கு முன்னோடி டிராஃபிக் ராமசாமியின் பொதுநல வழக்குகளாகும்.

இவரின் வாழ்க்கை வரலாற்று படத்தை நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து, நடித்தார். அதுபோன்று, சில திரைபடங்களில் பணம் வாங்காமல் நடித்துள்ளார்.

தள்ளாடும் வயதிலும் சமூக சேவையை செவ்வனே செய்துகொண்டிருந்த ராமசாமி உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு, கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு, சிறுநீரக பிரச்சினை உள்ளிட்ட காரணங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு (மே 4) காலமானார்.

இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட மக்களும் வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில், “திரு. டிராஃபிக் ராமசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் தொடங்கி, பொதுநல வழக்குகள் வரை சமூகத்திற்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. இவர் தொடுத்த பொதுநல வழக்குகள் பல முக்கியமான தீர்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன. பொது நலனுக்காக இறுதி வரை உழைத்த அவரது அர்ப்பணிப்பு என்றென்றும் பாராட்டத்தக்கது. அவரது மறைவிற்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுளார்.

‘சென்னையின் ஒன் மேன் ஆர்மி’யாக என்றும் மக்களின் மனதில் நிலைத்திருப்பார். சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு இவர் ஒரு வலுவான உத்வேகமாக இருப்பார்.

வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

புதன் 5 மே 2021