மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

இந்தியா முழுக்க லாக்டவுன் அவசியம்: அமெரிக்க தலைமை மருத்துவர்!

இந்தியா முழுக்க லாக்டவுன் அவசியம்: அமெரிக்க தலைமை மருத்துவர்!

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த உடனடியாக சில வாரங்களுக்கு லாக்டவுனை அறிவிக்க வேண்டும் என அமெரிக்காவின் தொற்றுநோய் பிரிவின் தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது உலக அளவில் பல நாடுகளில் நோய் கட்டுக்குள் உள்ளது. இதனால் நோய்ப் பரவல் வேகமும் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் இரண்டாவது அலை அதிகம் பேரை தொற்றி வருகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது உலகில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் இரண்டில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்கிறார்.

இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, மருந்துகள் ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டி உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் தொற்றுநோய்ப் பிரிவின் தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி நாளேடு ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர், “இந்தியாவில் மிகக் கொடூரமான வகையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், பரவல் சங்கிலியை உடைக்கவும் சில வாரங்களுக்கு லாக்டவுன் அறிவிப்பது அவசியமானது.

உடனடியாக ஆக்சிஜன் சப்ளை, மருந்துகள், தடுப்பூசிகள், பிபிஇ பாதுகாப்பு ஆடைகளை அதிகமாக சப்ளை செய்ய வேண்டும். அனைவரையும் ஒன்றிணைத்து இந்தியா இந்த நேரத்தில் கொரோனா சிக்கலைக் கையாள வேண்டும்.

அதே நேரத்தில் கொரோனா வைரஸை வென்றுவிட்டோம் என்று அறிவிப்பதெல்லாம் முதிர்ச்சியற்றது. இந்தியா இப்போது செய்ய வேண்டியது, உடனடியாக சில வாரங்களுக்கு லாக்டவுனை அறிவித்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். இதுதான் இப்போது முக்கியமானது என நினைக்கிறேன்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய நேரத்தில், அதாவது கடந்த ஆண்டில், அதைச் சமாளிக்க முழுமையான லாக்டவுனை சீனா அறிவித்தது. அதுபோன்று இந்தியாவும் லாக்டவுனை அறிவிக்க வேண்டும்.

இந்தியாவில் லாக்டவுன் நீண்ட காலத்துக்கு அதாவது ஆறு மாதங்கள் வரை அல்ல. தற்காலிகமாக இரண்டாவது அலையின் பரவல் சங்கிலியை உடைக்கவும், பரவலைத் தடுக்கவும் லாக்டவுன் அவசியமானது. லாக்டவுன் அறிவித்து மக்கள் நடமாட்டத்தைக் குறைத்தாலே, பரவல் குறைந்துவிடும்” என்றார்.

மேலும், “நீண்ட காலத்துக்கான லாக்டவுனை யாரும் விரும்புவதில்லை. இருப்பினும் சில வாரங்களுக்கு நாம் லாக்டவுன் நடவடிக்கை எடுப்பது கொரோனா வைரஸ் பரவலில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

சாலைகளில் சிலர் தங்கள் சகோதரிகளையும், பெற்றோரையும் படுக்கையில் கிடத்தி ஆக்சிஜனுக்காக அலைமோதுவதைப் பார்த்தேன். அதுபோன்ற செய்திகளையும் கேட்டேன்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் லாக்டவுன் நடவடிக்கை எந்த அளவு முக்கியமானதோ, அதேபோன்று தடுப்பூசியும் அவசியம். இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் போதாது. தற்போதுவரை 140 கோடி மக்களில் 2 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முழுமையாகத் தடுப்பூசி செலுத்த நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும்” என்று அந்தோனி ஃபாஸி கேட்டுக்கொண்டுள்ளார்.

-ராஜ்

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

திங்கள் 3 மே 2021