மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – தற்போதைய சூழ்நிலையில் அசைவ உணவு அவசியமா?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – தற்போதைய சூழ்நிலையில் அசைவ உணவு அவசியமா?

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு எனப் பல சிக்கல்கள் மக்களையும் அரசையும் வதைக்கின்றன. பரவல் அதிகமாக இருப்பதால் தடுப்பூசியின் மூலம் கொரோனா வைரஸிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் தவிக்கின்றனர். இதுமட்டுமன்றி தங்களின் உணவுப் பழக்கத்தின் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படும் பாதிப்பை குறைக்க முயற்சி செய்கின்றனர்.

இந்த நிலையில் ஞாயிறன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் முதல்நாள் சனிக்கிழமையே வாங்கி வைத்து மறுநாள் சமைக்கிறார்கள். இது சரியா... அத்துடன் அசைவ உணவு குறித்து மக்களிடையே சில சந்தேகங்களும் எழுந்துள்ளன. இதற்கான தீர்வு என்ன?

“பொதுவாக, ஏதாவது நோய்க்கிருமி பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில் அசைவ உணவு எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்பார்கள். ஆனால், அசைவ உணவுகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே சிக்கன், முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை இவ்வேளையில் எடுத்துக்கொள்வதில் தவறில்லை.

அசைவ உணவுப் பொருட்களை வாங்கும்போதும், சமைக்கும்போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

சமைக்கப்படாத சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை வாங்கும்போது அவை கெட்டுப்போகாமல் புதியதாக இருக்கின்றனவா என்று பார்த்து வாங்க வேண்டும். சுகாதாரமான முறையில் சுத்தம் செய்து விற்பனை செய்யப்படும் இடங்களில் மட்டுமே அசைவ உணவுகளை வாங்க வேண்டும். ஏற்கெனவே, பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் சிக்கன், மட்டனையோ, ‘ரெடி டு குக்' அசைவ பொருள்களையோ வாங்க வேண்டாம்.

எப்போதாவது ஒருமுறைதானே வெளியில் செல்கிறோம் என்று அதிகப்படியான அசைவ உணவுப் பொருள்களை வாங்கி ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கக் கூடாது. அதுபோல் சமைத்த உணவுகளையும் ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

சிலர் காலையில் பச்சை முட்டை குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். அதை இந்நேரத்தில் தவிர்க்கவும். முட்டையை நன்றாக வேகவைத்தோ, பொரித்தோ எடுத்துக்கொள்ளலாம். முட்டையை அரைவேக்காட்டில் சாப்பிடக் கூடாது.

சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றைக் கடையிலிருந்து வாங்கிவந்த பிறகு மஞ்சள், உப்பு கலந்த தூய்மையான நீரில் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்.

இவற்றை எண்ணெயில் பொரித்து உண்பதைவிட நன்றாகத் தீயில் வாட்டியோ (Grill), குழம்பாகவோ சமைத்துச் சாப்பிடலாம். மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுப் பொருள்களும் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் முக்கியமானவை. இவற்றையும் நன்றாகச் சமைத்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சிக்கன், மட்டனை மிளகு, மஞ்சள், இஞ்சி எல்லாம் சேர்த்து சூப்பாக வைத்துக் குடிக்கலாம். சிலர் மட்டனில் ஈரல், குடல், மண்ணீரல் (சுவரொட்டி), ரத்தம் போன்றவற்றை விரும்பி வாங்கி வந்து சமைத்துச் சாப்பிடுவார்கள். இவை நம் உடலில் ரத்தச் சிவப்பணுக்களை அதிகரிப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது நோய்க்கிருமி பரவிக்கொண்டிருக்கும் நேரம் என்பதால் நீங்கள் சாப்பிடும் முன்பு அவை நன்றாக வேகவைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிசெய்து கொள்வது நல்லது.

சிக்கன், மட்டன் எலும்புகளைச் சமைக்கும்போது எலும்பின் மையத்தில் உள்ள எலும்பு மஜ்ஜை (Bone marrow) பகுதி முழுவதுமாக வேகவைக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த அசைவ உணவை எடுத்துக்கொண்டாலும் அது நன்றாக வேகவைக்கப்பட்டுள்ளதா என்றும், கெட்டுப்போகாமல் உள்ளதா என்றும் பார்த்துச் சாப்பிடுங்கள்.

காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகள் இருக்கும் நேரத்தில் அசைவ உணவு உண்பதைத் தவிர்க்கலாம். சிலருக்கு சில அசைவ உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தலாம். உங்களின் உடல் எந்த அசைவ உணவுகளை ஏற்றுக்கொள்கிறதோ அவற்றை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சமைத்த அசைவ உணவுகளைக் கடைகளில் வாங்கி உண்பதைத் தவிர்க்கவும். வேறு வழியில்லை. கடையில்தான் வாங்க வேண்டும் என்னும்பட்சத்தில் உங்களுக்கு நம்பிக்கையான, சுகாதார முறைகளைப் பின்பற்றும் கடைகளில் வாங்கிச் சாப்பிடலாம்.

காலை மற்றும் மதிய வேளைகள் அசைவ உணவு சாப்பிட ஏற்றவை. ஒருவேளை இரவு அசைவ உணவு சாப்பிட்டால் சாப்பிட்ட பின் நான்கு மணி நேரம் கழித்து உறங்கச் செல்லுங்கள். இப்படிச் செய்வதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்கிறார்கள்” ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.

நேற்றைய ரெசிப்பி : முருங்கையிலை ஃப்ரைடு ரைஸ்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஞாயிறு 2 மே 2021