மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

வறண்ட வீராணம்; குறையும் பூண்டியின் நீர் மட்டம் – சென்னையின் நிலை?

வறண்ட வீராணம்; குறையும் பூண்டியின் நீர் மட்டம் – சென்னையின் நிலை?

கோடையின் தாக்கத்தால் வீராணம் ஏரி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்துள்ளது. ‘இந்த வறட்சியை சென்னை தாங்குமா... குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?’ என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.

இந்த ஏரியின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 44, 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர் மட்டத்துக்கேற்ப தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் வீராணம் ஏரி இரண்டு முறை முழு கொள்ளளவை எட்டியது.

இதற்கிடையே தற்போது உலக வங்கி நிதி உதவியுடன் வீராணம் ஏரியில் ரூ.73 கோடியே 64 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றினர். மேலும் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிட்டதாலும், கடும் வெயில் காரணமாகவும் நீர்மட்டம் குறைந்து வந்தது.

இதனால் தற்போது வீராணம் ஏரி தண்ணீர் இன்றி வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வறண்ட நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வீராணம் ஏரியை உலக வங்கி நிதி உதவியுடன் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைய இரண்டு ஆண்டுகள் ஆகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், “கடந்த 2016ஆம் ஆண்டு சீரமைப்பு பணிகள் சுமார் 50 சதவிகிதம் மட்டுமே நடந்தது. முழுமையாக முடிக்கப்படவில்லை. அதுபோல் இல்லாமல், தற்போது நடைபெற்று வரும் சீரமைப்பு பணியை முழுமையாக முடிக்க வேண்டும். இதை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக்குழு அதிகாரிகளை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர் அங்குள்ள விவசாயிகள்.

இந்த இந்நிலையில், கடுமையான வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்துள்ளது. ஏரியின் நீர் இருப்பு 39 சதவீதமாக குறைந்துள்ளது.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் மழைநீர் சேமித்து வைத்து தேவைப்படும்போது சென்னை குடிநீருக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீரை ஆந்திர மாநில அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். கடந்த ஆண்டு பெய்த பருவமழை மற்றும் கிருஷ்ணா தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வரை தொடர்ந்து வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் 8.060 டிஎம்சி தண்ணீர் பூண்டிக்குக் கிடைத்தது.

பூண்டி ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் கிருஷ்ணா தண்ணீரைத் திறக்க வேண்டாம் என்று அந்த மாநில அதிகாரிகளுக்கு தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பிப்ரவரி மாதம் 6ஆம்தேதி கிருஷ்ணா தண்ணீர் திறப்பு பூண்டி ஏரிக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே சென்னை குடிநீர் தேவைக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு பூண்டி ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இதன் காரணமாகவும், கடும் வெயிலின் தாக்கத்தாலும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது.

நேற்று (ஏப்ரல் 29) காலை பூண்டி ஏரியில் 1,264 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 39 சதவிகிதமாகும். ஏற்கனவே சென்னை குடிநீர் தேவைக்காக மே மாதம் வரை தண்ணீர் இருப்பதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், தற்போது பூண்டி ஏரியின் நீர்மட்டம் பாதிக்குமேல் குறைந்து உள்ளதால் கிருஷ்ணா தண்ணீர் திறப்புக்காக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதிநீர் வந்தால் மட்டுமே சென்னையின் குடிநீர் பிரச்சினை தீரும் என்ற நிலை உண்டாகியுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வெள்ளி 30 ஏப் 2021