மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

அதிக பாரம் ஏற்றினால் ஐந்து ஆண்டுகள் சிறை!

அதிக பாரம் ஏற்றினால் ஐந்து ஆண்டுகள் சிறை!

சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றினால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமையை ரத்து செய்யவும் சட்டத்தில் வழிவகை உண்டு என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மாநிலத்தின் பல இடங்களில் வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை செயலாளர், போக்குவரத்து கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘மோட்டார் வாகனங்கள் பாதுகாப்பு நோக்கத்துடன் விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு, மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்டு, போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி ஒவ்வொரு வாகனத்துக்கும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எடையுடன் பதிவு சான்று வழங்கப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

சரக்கு வாகனங்களில் பதிவுச் சான்றின்படி அனுமதிக்கப்பட்ட எடையைவிட கூடுதலாக பாரம் ஏற்றி இயக்கும் வாகன உரிமையாளர்கள் மீது அதிக பாரம் ஏற்றியதற்கு 20,000 ரூபாயும் கூடுதலாக வாகனத்தில் ஏற்றப்படும் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.2,000 வீதம் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக ஏற்றப்பட்டுள்ள சரக்குகளை இறக்கி வைக்கப்படும் செலவுத் தொகையும் வாகன உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.

மேற்கண்ட சட்ட விதிகளை மீறும் வாகனங்களின் அனுமதிச் சீட்டு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உருவாக்கப்பட்ட சாலை பாதுகாப்புக் குழுவின் வழிகாட்டுதலின்படி அதிக பாரம் ஏற்றி இயக்கப்படும் வாகன ஓட்டுநர்களின் உரிமம் (லைசென்ஸ்) தற்காலிகமாக ரத்து செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் அதிகபட்ச சிறைத்தண்டனையாக ஐந்து வருடங்கள் மற்றும் அபராதம் விதிக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் தங்களின் சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி வாகனங்கள் இயக்குவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 28 ஏப் 2021