மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

கோழிப்பண்ணை: 10 நாளில் ரூ.30 கோடி இழப்பு!

கோழிப்பண்ணை: 10 நாளில் ரூ.30 கோடி இழப்பு!

கொரோனா இரண்டாவது அலை பரவல் சற்று வேகமாக இருப்பதால் சிறுதொழில் செய்வோர், நடுத்தர தொழில் வர்க்கத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். குறிப்பாக கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடந்த 10 நாட்களில் ரூ.30 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இன்று (ஏப்ரல் 26) முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று (ஏப்ரல் 25) முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் 1,100க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு மூன்றரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. கொரோனா இரண்டாவது அலை பரவலால் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் தினசரி உற்பத்தியாகும் முட்டைகளை முழுமையாக விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை.

மேலும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சத்தில் முன்கூட்டியே முட்டைகளை விற்பனை செய்வதால், கொள்முதல் விலை குறைந்துள்ளது. மேலும் கடந்த 10 நாட்களில் 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த 1-ல், 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை கொள்முதல் விலை 3-ல் 410, 5-ல் 420, 8-ல் 435, 10-ல், 445, 12-ல், 460, 15-ல் 475, 17-ல், 485 எனப் படிப்படியான உயர்ந்தது. ஆனால், கடந்த 22-ல், 35 காசு சரிந்து 450, நேற்று மேலும் 35 காசு குறைக்கப்பட்டு 415 என கொள்முதல் விலை இரண்டு நாட்களில் 70 காசு சரிந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம், “கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்ற அச்சத்தில் பண்ணையாளர்கள், முட்டைகளை இருப்பு வைக்க விருப்பம் இல்லாமல், அன்றைய முட்டைகளை, அப்போதே விற்பனை செய்து வருகின்றனர்.

பண்ணையாளர்கள் போட்டிப் போட்டு விற்பனை செய்வதால், வியாபாரிகள் விலையைக் குறைத்து வாங்குகின்றனர். வட மாநிலங்களிலும், கொள்முதல் விலை குறைந்துள்ளது. ஹைதராபாத் மண்டலத்தில், 350 காசு வரை விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில், கொள்முதல் விலையில் இருந்து 40 காசு குறைத்து வாங்குகின்றனர்.

தற்போது வெயிலின் தாக்கல் குறைந்துள்ளதாலும், கோழிகள் 100 கிராம் வரை தீவனம் எடுத்துக்கொள்வதாலும், முட்டை உற்பத்தி 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மேலும் முட்டை உற்பத்தி செலவு, 450 காசு. ஆனால் ஒரு முட்டைக்கு ஒரு ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. ஒட்டு மொத்தமாக கடந்த 10 நாட்களில் பண்ணையாளர்களுக்கு 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது” என்று கவலை தெரிவித்துள்ளார்.

-ராஜ்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

திங்கள் 26 ஏப் 2021