ஆடுகள் திருட்டைக் கண்டுபிடிக்க ஆடுகளுடன் வந்தவர்கள்!

public

ஆடுகள் திருடுபவர்களைத் தனிப்படை அமைத்துக் கண்டுபிடிக்க பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஆடுகளுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று (ஏப்ரல் 24) சிலர் ஆடுகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் விசாரித்தபோது, “பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆடு வளர்ப்போர் தற்போது, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் உள்ள வயல்களில் பட்டி போட்டு ஆடுகள் மேய்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நாரணமங்கலம், கொளக்காநத்தம், குடிக்காடு, குரும்ப பாளையம், கொட்டரை, ஆதனூர், தெற்கு மாதவி உள்ளிட்ட கிராமங்களில் 40-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளை மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து திருடிச்சென்றுள்ளனர்” என்று கூறியவர்கள்…

மேலும், “இது குறித்து ஆடு திருடியவர்களின் பெயர்கள், அவர்களின் ஊர், புகைப்படங்களுடன் மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், இதுவரை போலீஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும்” என்றனர்.

இதையடுத்து அவர்கள் கோரிக்கை தொடர்பான மனுவை அலுவலகத்தில் இருந்த தனிப்பிரிவு போலீஸாரைச் சந்தித்து கொடுத்தனர். “விரைவில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீஸார் கூறியதும் ஆடுகளுடன் கலைந்து சென்றனர்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *