மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

கீதாச்சாரம் என்பது...!?

கீதாச்சாரம் என்பது...!?

ஸ்ரீராம் சர்மா

“கடமையை செய் ; பலனை எதிர்பார்க்காதே !” – இந்த மொக்கையான வாசகம்தான் நாடு தழுவிய சுவரெங்கிலும் பகவத் கீதையின் சாரமாக இன்னமும் தொங்க விடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இப்படியாக மொழி பெயர்த்தவர்கள் யார் ? தெரியவில்லை. இதுகாறும் , இது குறித்த மறுப்போ தெளிவுரையோ எவரிடத்திலிருந்தும் வரவில்லை. ஆயினும், எந்த காலத்திலும் எனக்கு இது ஏற்புடையதாக இருந்ததே இல்லை.

இப்படியானதொரு படுச் சக்கையான கருத்தை சொல்லியா பகவத்கீதை என்னும் இந்த நூல் இன்னமும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்னும் வியப்பு எனக்குள் என்றுமே இருந்து வந்தே இருக்கின்றது.

சரி, கீதையின் சாரமாக இவர்கள் சொல்ல வருவதுதான் என்ன ?

குனிந்து உழை ; கூலியை எதிர்பார்க்காதே என்பதா ? அல்லது, சம்பாதித்துக் கொடு ; சம்பளத்தை எதிர்பார்க்காதே என்பதா ? பாசம் செலுத்து ; பதில் புன்னகைக்கு காத்திராதே என்பதா ? அல்லது, அலையேறிப் படகோட்டு ; வலையை எட்டிப் பார்க்காதே என்பதா ?

இப்படி எல்லாம்தான் இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும் என்றால் யாருக்கு இங்கே வாழ்ந்து பார்க்கும் ஆசை வரும் ? இதில் ஏதேனும் நியாயம்தான் உள்ளதா ?

காலத்தைக் கடந்து ஒன்று நிற்க வேண்டுமென்றால் அதில் ஆழ்ந்த பொருளிருந்தாக வேண்டுமே !? எளிய மனித மனதால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத இந்தப் போதனைதான் கீதையின் சாரமாக இருந்திருக்குமா எனச் சிந்திக்க சிந்திக்க... அவ்வாறு இருக்க முடியாது என முடிவெடுத்தது எனது ஆழ்மனம் !

அன்றந்தப் போர்க்களப் பூமியில், பதினெண் அத்தியாயங்களோடு ஓதி உரைக்கப்பட்ட கீதையின் நோக்கமும் சாரமும் வேறு ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்றது எனது ஆய்வு மனம் !

எனில், அந்த வரிகளுக்குப் பின் இருக்கும் ஆழ்ந்த பொருள்தான் என்ன ? பார்ப்போம் !

அதன் முன், கீதோபதேசத்துக்கு முந்தைய ராமாயணத்துக்குள் புகுவோம் ! கவிச்சக்ரவர்த்தி கம்பர் காட்டும் காரணக் காட்சிகளைக் காண்போம் !

ராமாயணத்தில்...

அயோத்தி மன்னன் தசரதனுக்கு புதல்வனாக இராமன் பிறக்கிறான். அவனுக்கு சகோதரர்களாக இலக்குவன் - பரதன் - சத்துருக்கனன் ஆகிய மூவர் பிறக்க இராமனோடு சேர்த்து நான்கு சகோதரர்களாக வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

பிறகு , சுயம்வரம் முடிய – மணக்கோலம் கண்ட சீதை அயோத்தி வர – கோடிய கூனி கோலம் அழிக்க – கொடிய கைகேயி வரம் வேண்ட – தயரதன் சாய - இராமன் கானகம் புக – அங்கே, சூர்ப்பணகை ஊதிக் கிளப்பிய காமஏமப் புகை பட்டு இராவணன் ஓடி வர – சீதை அசோகவனச் சிறை பட – அவளைத் தேடிப் போகும் நேரத்தில் கடல் போல் மிரட்டிக் கொண்டிருந்த கங்கையைக் கடக்க உதவி செய்து, பர்ணசாலை அமைத்து மீனும் தேனும் படைத்து அன்பே வடிவாக தொழுது நின்ற குகப் பெருமானைக் கண்ட தருணத்தில் இராமன் நெகிழ்ந்து சொன்னான்...

“குகனொடு ஐவரானோம்...!”

அரண்மனைப் பிறப்பால் நால்வராக இருந்தவர்கள் இப்போது குகனையும் உடன்பிறப்பாகக் கொண்டு ஐவர் ஆனார்கள்.

அடுத்து, இராவணனை விட பலசாலியாகவும் அந்த இராவணனுக்கு உற்ற நண்பனாகவும் விளங்கிய வாலியை கடந்து போனால்தான் காரியம் ஆகும் என்பதால் செய்வதறியாது சிந்தனை வயப்பட்டிருந்த இராமனது பாதங்களில்...வாலியின் ஆணவக் கொடுமையிலிருந்து தப்பிக்க அடைக்கலம் வேண்டி வந்து வீழ்ந்த சுக்ரீவன்,

“இராமா, உன்னுடைய நோக்கத்துக்குண்டான சகல உதவிகளையும் நான் செய்வேன். இது சத்தியம். என்னைக் காப்பாற்று...’ என்று அலற, அவனை அள்ளி அணைத்துக் கொண்டபடி இராமன் சொன்னான்.

“குன்று சூழ்வான் மகனொடு அறுவர் ஆனோம்...’

முதலில், வேட்டுவக் குகனுக்கு தான் செய்த உதவிக்காக அவதாரத்தின் உடன்பிறப்பு என்னும் அந்தஸ்து கிடைத்தது. பிறகு, சூரியப் புத்திரனாய் பிறந்தும் வாலியினிடத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த சுக்ரீவன் - உதவி செய்வதாக சொன்னதற்காகவே அவனுக்கும் சகோதர அந்தஸ்து கிடைத்துவிட்டது.

முடிவில், இலங்கை அகன்று சரணாகதியாக வந்து சேர்ந்த விபீஷணனைக் கண்ட இராமன், “ அகன் அமர் காதல் ஐய; நின்னொடும் எழுவர் ஆனேம்...’ என அவனுக்கும் அள்ளிக் கொடுத்தான் அவதாரத்தின் உடன்பிறப்பு என்னும் அந்தஸ்தை !

மொத்தத்தில், சகோதரர்கள் நால்வர் - எழுவராகி நின்றார்கள். அதோடு அந்த வரிசையும் நின்றது.

இப்போது, கம்பனைப் படிப்போர்க்கு எழும் ஆயாசமும் ஆதங்கமும் நமக்குள்ளும் எழுகின்றது...கேள்விகள் பிறக்கின்றன...

எல்லாம் சரி, எங்கள் அனுமன் எங்கே ?

இராமனைக் கண்ட மாத்திரத்தில் தான் கொண்ட தொண்டன் என்னும் கோலத்தைக் கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் கைகூப்பிய வண்ணமே நின்று கொண்டிருந்தானே...அந்த அனுமன் எங்கே ?

பட்டாபிஷேகக் காட்சியில் எல்லோரும் கம்பீரம் காட்டிக் கொண்டிருக்க பட்டாபிஷேக மேடையோடு கூடிய அந்த அரியணையைத் தன் தோளில் தாங்கியபடி நின்றானே...அந்த அனுமனுக்கு உரிய இடம் எங்கே ?

இராமன், அனுமனையும் தன் உடன்பிறப்பாக அங்கீகரித்து அறிவித்திருக்க வேண்டுமா இல்லையா ?

அனுமன் இல்லாது போனால் கிஷ்கிந்தா காண்டம் உண்டா ? சுந்தர காண்டம் உண்டா ? யுத்தகாண்டம்தான் உண்டா ?

அசோகவனத்து சீதைக்கு கணையாழி காட்டிக் காகுத்தன் வருகையை அறிவித்தது யார் ? ஏமகூடம் தாண்டி மேருமலை கடந்து அன்று மூலிகை மலையினைப் பெயர்த்து வந்து இலக்குவணன் உயிரைக் காத்தது யார் ?

“சுட்டது குரங்கு...” எனவும், “அரியணை, இருந்தது என் உடல்...” எனவும் மருகிப்போய் இராவணன் பேதலித்துப் பேச... அந்தக் கணமே இராவணனது போர் மனதை கிலியுறச் செய்து போரின் முடிவுக்கு முன்னுரை எழுதியது யார் ?

இவ்வளவும் செய்த அனுமன் எங்கே ? அவனுக்குரிய இடம் எங்கே என்றெல்லாம் நாம் வேண்டுமானால் ஆயாசப்பட்டுக் கேட்கலாம் ?

ஆனால், அனுமன் கேட்கவேயில்லை...

‘என் பணி ராமதூதம் மட்டுமே...’ என ஓயாமல் செயல்பட்டுக் கொண்டே இருந்தான் அனுமன்.

சரி. அவன்தான் கேட்கவில்லை. அது அவனது நோக்கமில்லை. ஆனால், மனித வடிவில் வந்த தெய்வம் எனத் தொழப்படும் இராமனாவது அனுமனுடைய செயலுக்குண்டான பலனைத் தானாகவே முன் வந்து அளித்திருக்க வேண்டுமல்லவா ?

அப்படி அளித்தானா என்றால்...ஆம், அளித்தான் ! எப்படி அளித்தான், எப்போது அளித்தான் தெரியுமா ?

பட்டாபிஷேகம் முடிந்த அடுத்த கணம் அனுமனை அழைத்து சபை நடுவே நிறுத்திய இராமன் காண்போர் கண் கசிய அனுமனிடம் சொன்னான்...

“பொருந்துறப் புல்லுக...!’

“அனுமனே, உனக்கு நிகராக எனக்கு உதவி செய்தவர் யார் இங்கே ? நீ செய்த உதவிக்கு என்னால் என்ன கைம்மாறுதான் செய்து தீர்த்துவிட முடியும் சொல் ! போர்வீரம் காட்டும் பரந்து விரிந்த தோளுடையவனே. இதோ, இந்த நிறைந்த சபை நடுவே என்னைக் கட்டி அணைத்துக் கௌரவப்படுத்துவாயாக...!’ என்றான்.

கவனியுங்கள் !

ஒருவன் மற்றொருவனைக் கட்டி அணைத்துத் தட்டிக் கொடுப்பானே ஆனால், அவனே உயர்ந்த நிலையில் இருப்பவன் ! அவனால் கட்டி அணைக்கப்படுபவன் மேற்கண்டவனுக்கு அடக்கமானவனாவான் என்பதே உலக வழக்கம் !

இராமனது சார்பாக கம்பர் இவ்வாறு எழுதிப் பிரகடனப்படுத்துகிறார்...

“மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்தினிது அருளின் நோக்கி

ஆர் உதவிடுதற்கு ஒத்தார் நீ அலால் ? அன்று செய்த

பேர் உதவிக்கு யான் செய் செயல்பிறிது இல்லை ; பைம்பூண்

போர் உதவிய திண்தோளாய் ! பொருந்துறப் புல்லுக...” என்றான்.

அனுமனின் செயலுக்கு இராமன் அளித்த பதில் மரியாதை நம்மை நெகிழச் செய்து விடுகிறது.

அனுமன் தன் செயலுக்கான பலனில் உரிமை எடுத்துக் கொள்ளாமல் விட்டதால் விளைந்த மாபெரும் நன்மையே அது ! அதனை ஆழ்ந்து உணர இப்போது நாம் கீதையின் வரிகளுக்கு சென்றாக வேண்டும்...

அதன் மூல ஸ்லோக வரிகள் இதுதான் :

“கர்மண்யேவ அதிகாரஸ்தே ; மா பலேஷூ கதாசன...’

இதற்குண்டான பொருளை வார்த்தைக்கு வார்த்தை பார்ப்போம்.

கர்ம – செயல்

யேவ – அதில்

அதிகாரஸ்தே – உரிமைப்பாடு.

மா – இல்லை

பலேஷீ – பலன்கள்

கதாசன – எப்பொழுதும்

இதனைக் கொண்டு கூட்டிப் பார்த்தால்...

“செய்யும் செயலில் உனக்கு இருக்கக் கூடிய உரிமை ; அதன் பலன்களில் என்றுமே இருப்பதில்லை...’ எனக் கொள்ளலாம்.

மறை பொருளாக என்ன சொல்ல வருகிறது கீதை ?

உன் செயலுக்கான பலன்கள் என்னென்னவாக இருக்க முடியும் என்பதை காலத்திடம் விட்டுவிடு. அந்த உரிமையை நீ எடுத்துக் கொண்டுவிடாதே என்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏன் ?

கீதையின் வாசகத்தில் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும். ‘செயல்’ என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர ‘செயல்கள்’ என்று சொல்லப் படவில்லை.

‘கர்மண்யேவ...’ என்பது ஏகவசனத்துக்கான பிரயோகம் ஆகும். ‘கர்மசூ...’ என்றால்தான் பன்மை என்கிறார் புகழ்பெற்ற விவேகானந்தா கல்லூரியில் சமஸ்கிருத விரிவுரையாளராக இருந்து ஓய்வு பெற்ற பெரியவர் திரு. ராமசந்திரன் அவர்கள். அவரிடம் மேலும் பாடம் கேட்டேன்.

‘நன்றாகக் கேட்டீர்கள்....பலனைப் பற்றி சொல்லும்போது மட்டும் ‘பலே’ என்று இல்லாமல் ‘பலேஷூ’ அதாவது பலன்கள் எனப் பன்மையில் சொல்லப்பட்டிருக்கிறதைக் கவனியுங்கள்...” என்றார்.

அதாவது, செயல் செய்யும் உரிமையைப் பெற்றிருப்பதால் அதன் பலன் இதுதான் என்று ஒன்றை நிர்ணயித்துக் கேட்கும் உரிமையைக் கோரி விடாதே. ஒருவேளை, அது பலன்களாகக் கூட பன்மையில் விரிந்து கிடைக்கலாம் என்கிறதாம் கீதை.

ஆம், ஒருவன் செய்தது நற்காரியம் என்றால் அதற்குண்டான பலன்கள் பல வகைகளில் இருந்தும் வரலாம் அல்லவா ? ஆகவே, என் செய்கைக்கான பலன் இதுதான் என ஏதோ ஒன்றை மட்டும் கேட்டுப் பெற்றுக் கொண்டு ஏமாந்து விடாதே.

உஷாராக, அந்த உரிமையை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டுக் காத்திரு. அது பல வகைகளில் உனக்கு அள்ளித்தரும் என்கிறது பகவத்கீதை.

கவனித்துப் பாருங்கள்....

இன்றும் கூட, இராமனை வழிபடும் வைணவத்தார் அனுமனை பெயர் சொல்லி அழைப்பதில்லை. மாறாக, மரியாதை கலந்த கனிந்த பக்தியோடு அனுமனை “சிறிய திருவடி...” என்றே ஏற்றிப் போற்றுகின்றனர்.

நாட்டில் இராமனுக்கு அடுத்தபடி அனுமனுக்குத்தான் தனிக் கோயில்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. வாளாவிய சிலைகள் இங்கே அனுமனுக்கே நிறுவப்பட்டிருகின்றன.

இராம பக்தர்களுக்கு நிகராக அனும பக்தர்களும் ஏராளம். அனுமனுக்கு சன்னதி காணாத - அனுமன் சாலீஸா பாடப்படாத இராமனது கோயில்களே இல்லை எனலாம்.

ஆம், மதியூகி மந்திரியான அனுமன், தான் செய்த செயலுக்கு பலன் அளிக்கும் உரிமையை காலத்திடம் கொடுத்து விட்ட காரணத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பலன்களை அடைந்தான்.

ஆம், அவன் காத்திருந்தான். கவிமகா சக்கரவர்த்தி கம்பனின் பத்தாயிரம் பாடல்கள் பாடித் தீர்க்கப்பட்ட போதும் கூட அவசரப்படாமல் பொறுத்திருந்தான்.

உதவிய எல்லோரும் இராமனுக்கு உடன்பிறப்புகளாக மேலேறிக் கொண்டே இருக்க... எனக்கான இடம் எது ? என்னும் தன்முனைப்பு யோசனையே இல்லாமல்... ‘ஓ... இராமா...” எனக் கடல் தாண்டிப் போனான். கடைசி வரை கனிந்து நின்றான்.

அவனது கடமை உணர்ச்சியைக் கண்டுக் காலம்தான் கலங்கிப் போனது. கம்பரும் நிலை குலைந்திருப்பார் !

காலத்தை ஆளும் கடவுள் தன்மை கொண்ட இராமனோ, வல்லோர்கள் நிறைந்த சபை நடுவே தன்னை மார்போடு ஆரத் தழுவச் செய்ததன் வழியே அனுமனைத் தன்னிலும் மேலான நிலைக்கு உயர்த்தி நியாய ஒளியினை ஏற்றிக் காட்டி நின்றான் !

காலத்தால் பின் எழுந்த மகாபாரதக் கீதையும்...

கடமையை செய்தபடியே இருங்கள் ; நிச்சயம் காலம் உங்களையும் ஓர் நாள் உயர்த்தி - ஒளியேற்றி வைக்கும் என்கிறதோ ?

அப்படித்தான் கொள்கிறது எனது எளிய ஆய்வு மனம் !

கட்டுரையாளர் குறிப்பு:

ஸ்ரீராம் சர்மா

எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்..)

.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 24 ஏப் 2021