மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஏப் 2021

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

வாடகை செலுத்தாததால் கடலூர் பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழக நேரப்பதிவாளர் அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கடலூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான கடை உள்ளது. இந்தக் கடையை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கடலூர் மண்டலம் சார்பில் ஏலம் எடுத்து, அதை விசாரணை மற்றும் நேரப்பதிவாளர் அலுவலகமாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த அலுவலகத்துக்கு மாதந்தோறும் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வாடகையை இதுவரை செலுத்தவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.9 லட்சம் பாக்கி வைத்துள்ளனர்.

இது பற்றி நகராட்சி அதிகாரிகள் பலமுறை கடலூர் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், நோட்டீஸ் அனுப்பியும் வாடகையைச் செலுத்த முன்வரவில்லை.

இதையடுத்து அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி நேற்று (ஏப்ரல் 21) நகராட்சி வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த்துறை அலுவலகர்கள் பஸ் நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக விசாரணை மற்றும் நேரப்பதிவாளர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்.

இது தவிர போக்குவரத்து தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் தொழில்வரியையும் நகராட்சிக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிர்வாகம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் டிரான்ஸ்போர்ட்கள் பெருமளவில் லாபம் ஈட்டிக்கொண்டிருக்கும் வேளையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஏன் அலுவலக வாடகையைகூடத் தர முடியாமல் இருக்கிறது? இதுபோன்ற அவலங்கள் தொடர காரணம் என்ன?

விவரமறிந்தவர்களிடம் கேட்டோம், “கடலூர் மட்டுமில்லை. எல்லா போக்குவரத்துக் கழகத்திலும் இந்த நிலை இருக்கிறது. உதாரணத்துக்கு, 3,726 பேருந்துகள் இயக்கப்படும் விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் உதிரிபாகங்கள், பராமரிப்புச் செலவுகளுக்கு 731 கோடி ரூபாய், டோல் கட்டணத்துக்கு 39 கோடி ரூபாய் என செலவுகள் ஏகத்துக்கும் எகிறுகின்றன. இதுமட்டுமல்லாது மாணவர்கள் சலுகைக் கட்டணத்துக்காக அரசு கொடுக்க வேண்டிய 272 கோடி ரூபாயைக் கொடுக்காமல் வைத்திருக்கிறது. ‘ஒரு சோறு பதம்’ கதைதான். விழுப்புரத்தைப் போலவேதான் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் செலவுகள் எகிறியுள்ளன. இத்துடன் தனியார் பேருந்துகளுக்கு சாதகமாகச் செயல்படும் நிர்வாகச் சீர்கேடும் கைகோத்தால் போக்குவரத்துக் கழங்களால் எப்படி லாபம் ஈட்ட முடியும்?

உதிரிபாகங்கள் முதல் பேருந்து கொள்முதல் வரை கமிஷனை எதிர்பார்த்து தரமில்லாத பொருள்களை கொள்முதல் செய்வதுதான் நஷ்டத்துக்கான காரணம். போக்குவரத்துக் கழகம் இவ்வளவு பெரிய நஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், நஷ்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதை சரிசெய்யாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உயர்மட்டக் குழு அமைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து முறைகேடுகளைத் தடுக்க வேண்டும். அப்போதுதான் போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்திலிருந்து மீட்க முடியும். வாடகைக்கான பணத்தைச் சரியாகக் கட்டமுடியும். இதுபோன்ற அவலத்தைத் தடுக்க முடியும்” என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

இந்த நிலையில், “கொரோனா ஊரடங்கால் வெளிமாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள் காலையிலேயே இயக்கப்படுகின்றன. இதனால் குறைவான பயணிகளே புறப்பட்டு செல்கிறார்கள். அதன் காரணமாக பஸ் போக்குவரத்தும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு வருமானம் குறைந்துள்ளது. தினமும் ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் அரசு போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வியாழன் 22 ஏப் 2021