மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’: அவசர நடவடிக்கை!

‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’:  அவசர நடவடிக்கை!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் திரவ ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச்செல்வதற்காக ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், பல மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.

எனவே, ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களில் இருந்து ரயில் மூலம் ஆக்சிஜனைக் கொண்டு வருவதற்கு ரயில்வே துறையின் உதவியை மராட்டியம், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் நாடியுள்ளன. திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் சிலிண்டர்களை எடுத்து வருவதற்காக சரக்கு ரயில்களை இயக்க கோரியிருந்தன. இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையிலும், நாடு முழுவதும் அதிகரித்துவரும் ஆக்சிஜன் தேவையைக் கருத்தில்கொண்டும் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்தது.

‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் இந்த டேங்கர் ரயில்கள் நேற்று (ஏப்ரல் 19) முதல் தங்கள் இயக்கத்தைத் தொடங்கின. அந்தவகையில் மும்பை கலாம்போலி, பொய்சார் ரயில் நிலையங்களில் இருந்து காலி டேங்கர் ரயில்கள், ஆக்சிஜனை ஏற்றி வருவதற்காக விசாகப்பட்டணம், ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா, பொகாரோ போன்ற இடங்களுக்கு விரைந்தன.

ஆக்சிஜன் ஏற்றுவதற்காக முதல் காலி ரயில் நேற்று புறப்பட்டாலும், ஆக்சிஜன் விநியோக நடவடிக்கைகள் தொடங்குவதற்கு ஓரிரு நாட்கள் ஆகும் என ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் மூலம் நாட்டின் எந்த பகுதியில் ஆக்சிஜன் தேவைப்பட்டாலும் அந்த தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்’ என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்த ஆக்சிஜன் எக்ஸ்பிரஸின் விரைவான போக்குவரத்துக்காக பசுமை வழித்தடம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதன் மூலம் நோயாளிகளின் தேவை பூர்த்தியாகும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இயக்கத்துக்காக ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் மாநிலப் போக்குவரத்து கமிஷனர்கள் மற்றும் பிரதிநிதிகள் இணைந்த கூட்டம் கடந்த 17ஆம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 20 ஏப் 2021