மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஏப் 2021

இந்தியாவில் பரவுவது உருமாறிய கொரோனா: தடுப்பது எப்படி?

இந்தியாவில் பரவுவது உருமாறிய கொரோனா: தடுப்பது எப்படி?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று (ஏப்ரல் 18) காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்தத் தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,47,88,109 உயர்ந்துள்ளது. புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல் 17) ஒரே நாளில் 1,501 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி அதிக அளவில் பரவி இருப்பதாகவும் அது வெளிநாடுகளுக்கும் பரவி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மரியா வன் கேர்கோவ், “இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் இரண்டு மாநிலங்களில் பி.1.617 என்ற புதிய உருமாறிய கொரோனா முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது, பி1617 வம்சத்தைச் சேர்ந்தது.

இந்த வைரஸ், இ484கியூ, எல்452ஆர் என்ற இரண்டு மரபணு உருமாறிய கொரோனா ரகங்களாக மாற்றம் அடைந்தது. இந்த வகையான கொரோனா, இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அத்துடன், பிற நாடுகளிலும் முழுவதும் பரவி வருகிறது. குறிப்பாக, ஆசியாவிலும் வட அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டது. இந்த கொரோனா, வேகமாக பரவக்கூடியது.

இதனால், தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, இந்தியாவுடனும் இந்த கொரோனா பரவிய இதர நாடுகளுடனும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது” என்று கூறியுள்ளார்.

தற்போது பரவிவரும் உருமாறித் தொற்றும் கொரோனா, முதல் அலை தொற்று போல் அல்லாது சிறுவயதினர் உட்பட அனைவரையும் பாகுபாடில்லாது தாக்குவதாக அறியப்படுகிறது. மேலும் இளவயது நோயாளிகள், பெரிதான எந்தவிதமான அறிகுறிகள் இல்லாமல் இருப்பது மேலும் கவலைகொள்ள வைக்கிறது.

வழக்கமாக வரும் இருமல், காய்ச்சல், உடல்சோர்வு, உடல்வலி, தொண்டைவலி போன்ற அறிகுறிகள் இருந்து அவர்களைத் தனிமைப்படுத்தி அடுத்தவருக்கு நோய் தாக்காது காக்க முயலலாம்.

ஆனால், அறிகுறிகள் இல்லாது பாதிக்கும் இவ்வகை நோயால் தொற்று எண்ணிக்கையும் கூடிட வாய்ப்புகள் அதிகம். மேலும், இளவயதினருக்கு வரும் கொரோனா சாதாரண அறிகுறிகள் தென்படாமல், நுரையீரல் மற்றும் இதர உடல் உறுப்புகளை சேதப்படுத்துவதும் வெகுவாக நடக்கிறது என்பதும் கவலைக்குரிய தகவல். இதனால் இறப்பு விகிதம் மிக அதிகமாகக் காணப்படவும், அப்படி உயிர் இழப்பவர்கள் பெரும்பாலும் இளைய சமுதாயத்தினராக இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இவர்களில் ஒரு சிலருக்கு இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் தொற்றை பரிசோதனை மூலம் அறிந்திடவும் முடிவதில்லை என்பது உள்ளபடியே பெரும் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.

தேர்தல், விடுமுறை தினம், கொண்டாட்டங்கள், ஒன்றுகூடல்கள் என கொரோனாவை மறந்து சர்வ சாதாரணமாக மாறிப்போன மனித குலத்துக்கு ஒரு மிகப்பெரிய பேரிடி இந்தப் புதியவகை கொரோனா என்பதே மருத்துவ உண்மை.

ஆனால், “நாம் முன்பு நம்மை பாதுகாத்தது போல் முகக் கவசம், தனிமனித விலகல், கைசுத்தம், ஒன்றுகூடல் தவிர்த்தல், முக்கியமாக, தடுப்பூசி உபயோகம் போன்றவற்றை முறையாகக் கடைப்பிடித்து வருவோமேயானால் இந்தப் புதுவகை உருமாற்றத்தையும் இரண்டாம் அலையையும் மிக எளிதாகக் கடக்கலாம். நோயை வெல்லலாம்” என்கிறார்கள் இந்திய மருத்துவ நிபுணர்கள்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 18 ஏப் 2021