மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

மீண்டும் நெருக்கடியில் சிறு தொழில் நிறுவனங்கள்!

மீண்டும் நெருக்கடியில் சிறு தொழில் நிறுவனங்கள்!

கொரோனா முதல் அலை தாக்கத்தால் முடங்கிய தொழில்கள் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டு வந்தன. இந்த நிலையில் வேகமாகப் பரவி வரும் இரண்டாவது அலையால் சிறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் கடுமையான நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன.

சென்னை, கோவை, சேலம், ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், வெளிமாநில தொழிலாளர்களும் அதிக அளவில் வேலை பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு திடீரென்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகப்பெரிய துயரங்களைச் சந்தித்தார்கள்.

தற்போதும் கொரோனா வேகமாகப் பரவுவதால் மீண்டும் ஊரடங்கு வரலாம் என்ற பீதி ஏற்பட்டுள்ளதால் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள். இதனால் வெளிமாநில ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் மூலப்பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் சிறு தொழில் நிறுவனங்களைத் தொடர்ந்து நடத்த முடியுமா என்று புரியாமல் தவிக்கிறார்கள் சிறு தொழில் நடத்துபவர்கள்.

தொழில் நகரங்களில் முதன்மையான கோவையில் சுமார் 50,000 சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்களில் ஒரு லட்சம் பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது 10 முதல் 100 வெளிமாநிலத் தொழிலாளர்கள் வேலைப்பார்க்கிறார்கள். இப்போது அவர்களைத் தக்கவைக்கும் முயற்சியில் தொழிலதிபர்கள் ஈடுபட்டுள்ளார்கள். மேலும், தற்போது தொழில்துறை சந்திக்கும் இந்த நெருக்கடிகளால் கடந்த சில மாதங்களாகப் பணப்புழக்கமும் மிகவும் குறைந்துவிட்டது.

இது குறித்து, கோவை கணபதியைச் சேர்ந்த பேப்பர் கப், இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனம் நடத்திவரும் மணிராஜ் என்பவர், “கொரோனாவுக்கு முன்பு என்னிடம் 20 பேர் வேலை பார்த்தார்கள். பணப்புழக்கமும் சீராக இருந்தது. இப்போது எல்லாமே தலைகீழாகிவிட்டது. தொழிலாளர்கள் வெளியேறி விட்டார்கள். எனது தொழிலை விரிவுபடுத்தவும், உற்பத்தி பொருட்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும் திட்டமிட்டு இருந்தேன். ஆனால், உற்பத்தி 40 சதவிகிதம் அளவுக்குக் குறைந்து விட்டது.

இயந்திரங்கள் வாங்க ரூ.70 லட்சமும், மூலப்பொருட்கள் வாங்க ரூ.10 லட்சமும் செலவிட்டேன். ஆனால் கிடைக்கும் வருவாய் கட்டட வாடகை, மின்கட்டணம் ஆகியவற்றுக்கே சரியாக உள்ளது. வங்கியில் பெற்ற கடனைத் திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து கூடுதல் வட்டிக்குக் கடன் வாங்கி இருக்கிறேன்” என்கிறார்.

கிட்டத்தட்ட இவரை போன்ற பல தொழில்முனைவோர்கள் கொரோனாவால் முடங்கிவருவதால் தமிழகத்தில் சிறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கிவருகின்றன.

இந்த நிலையில் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக மத்திய ரயில்வே வடக்கு, கிழக்கு இந்தியப் பகுதிகளுக்கு 230 கோடைக்கால சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

-ராஜ்

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

சனி 17 ஏப் 2021