மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு: மாணவர்கள் போராட்டமா?

தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு: மாணவர்கள் போராட்டமா?

அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து நாளை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்பட்டது. அதனால், கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. ஆன்லைனில் தேர்வு நடைபெறுவதால் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முறைகேட்டை தடுக்கும் நோக்கில் ஆன்லைன் தேர்வில் ஒரு சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது.

அதன்படி தேர்வு எழுதும் மாணவர்கள் கேமராவை விட்டு சற்று திரும்பினாலோ, அசைந்தாலோ, இருமினாலோ, எந்தவொரு சத்தம் கேட்டாலோ, கூடுதலாக சிறிது நேரம் கேள்வி குறித்து சிந்தித்தாலோ தேர்வுகளில் முறைகேடுகளை செய்ததாக கருதப்பட்டுள்ளது.

இந்நிலையில், 4 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகள் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய பாடத்துக்கு அருகே தேர்ச்சி அல்லது தோல்வி என்று குறிப்பிடாமல், ‘நிறுத்திவைப்பு’ என்பதை குறிக்கும் விதமாக WH (With held) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், 75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சில மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தாததாலும் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், மாணவர்களும், பேராசிரியர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இது மாணவா்களின் தவறு அல்ல தொழில்நுட்பக் கோளாறு. குளறுபடியான தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும். தேர்வு முடிவுகள் குறித்த குளறுபடிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது,

” ஆன்லைன் தேர்வின்போது வீட்டில் ஃபேன் ஓடுவதினால் வரும் சத்தம் கேட்டாலே, கேமராவில் ரெட் லைட் எரிந்து வார்னிங் கொடுக்கும். தொடர்ச்சியாக ரெட் லைட் எரிந்து வார்னிங் கொடுத்து வந்தால், அதுகுறித்து பேராசிரியர் குறிப்பிட்ட மாணவரிடம் விசாரிப்பார். இதற்காக 10 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் நியமிக்கப்பட்டிருப்பார். நம் வீட்டில் இருக்கும் பிரச்சினையை கூறினாலும், அதை கேமரா எடுத்துக் கொள்ளாததால், அதற்கு தீர்வு கிடைக்காது. இப்படி தொடர்ச்சியாக ரெட் லைட் எரிந்தால் கடைசியில் Mal practice(முறைகேடு) என அதுவாகவே எடுத்துக் கொள்ளப்படும். தேர்வு எழுதும்வரை எந்த பக்கமும் அசையக் கூடாது, கண்விழி எங்கும் செல்லக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. இப்படி கஷ்டப்பட்டு எழுதிய தேர்வின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட பெயில் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சின்ன சத்தம் கேட்டாலே முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் வேளையில், மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டனர், ஈடுபடவில்லை என்பதை எவ்வாறு பல்கலைக்கழகம் நிரூபிக்கும். இதனால், தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் மறுபரீசிலனை செய்ய வேண்டும்.

தேர்வு முடிவுகளை எதிர்த்து நாளை மாணவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்” என கூறினர்.

வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வெள்ளி 16 ஏப் 2021