pகும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

public

கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களில் இதுவரை 2,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டு ஹரித்வார் நகரின் கங்கை நதிக்கரையில் கடந்த 1 ஆம் தேதி முதல் வரும் 30ஆம் தேதி வரை கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது. 12, 14 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புனித நீராடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மூன்று மாதங்கள் நடைபெறக் கூடிய திருவிழா நிகழ்வுகள் ஒரு மாதமாக குறைக்கப்பட்டன. இருப்பினும், கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை. கடந்த 14ஆம் தேதி நடந்த புனித நீராடலில் கிட்டதட்ட 3 லட்சம் பேர் கங்கையில் நீராடினர்.

மக்கள் கூட்டம் அலைமோதுகின்ற வேளையிலும், மக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்ததை வீடியோக்களில் காணமுடிந்தது. விழாவுக்கு வருபவர்களுக்கு கொரோனா நெக்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டாலும், இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை காவல்துறை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். அதனால், மக்களை கட்டுப்படுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டனர். முந்தைய காலங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கும்பமேளாவில் பணியாற்றி உள்ளார்கள். ஆனால், இந்த முறை முதல்முறையாக அவர்களுக்கு சிறப்பு காவல்துறை அதிகாரிகள் அங்கீகாரமும், அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், நேற்றுவரை 2167 பேருக்கும், 30 சாதுக்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹரித்வாரில் முகாமிட்டிருந்த நிர்வாண சாதுக்களின் அமைப்பான மகாநிர்வாணி அகாதாவின் தலைவர் (மகாமண்டலேஸ்வர்) கபில் தேவ் (65) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கபில்தேவ் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார்.

மொத்தம் 13 சாதுக்கள் அமைப்பு உள்ளன. இதையடுத்து, 13 சாதுக்கள் அமைப்புகளில் இரண்டாவது பெரிய அமைப்பான நிரஞ்சனி அகாதா, நாளையுடன் (ஏப்ரல் 17) கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக திடீரென நேற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சாதுக்கள் அமைப்புகளும் வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஹரித்வார் தலைமை மருத்துவ அதிகாரி எஸ்.கே.ஜா கூறுகையில், “கும்பமேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து இந்திய அகாதா பரிஷத் தலைவர் மகந்த் நரேந்திர கிரியும், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாதுக்களுக்கும், அகாதாக்களுக்கும் தொடர்ந்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி வருகிறது. நாளையிலிருந்து பரிசோதனை தீவிரப்படுத்தப்படும்.

கும்பமேளாவுக்கு வந்து சென்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிகுறிகள் ஏதும் இருந்தால், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

உத்தரகாண்டில் மதம் சார்ந்த கூட்டங்கள், சமூகக் கூட்டங்கள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் கூடக் கூடாது என உத்தரகாண்ட் அரசு, நேற்று (ஏப்ரல் 15) கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் கும்பமேளாவுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத், ஹரித்வார் நகரில் கங்காதேவி ஆறாக ஓடுகிறார். கொரோனாவில் இருந்து அவர் எங்களை காப்பாற்றுவார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *