மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

நடுக்கடல் விபத்து: 3 தமிழக மீனவர்கள் பலி; 9 பேர் மாயம்!

நடுக்கடல் விபத்து: 3 தமிழக மீனவர்கள்  பலி; 9 பேர் மாயம்!

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே விசைப்படகு மீது சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் மோதிய விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வேப்பூர் பகுதியிலிருந்து அதே பகுதியைச் சேர்ந்த ஜாபர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 11ஆம் தேதி புறப்பட்டு மீன்பிடிக்கச் சென்றனர். அந்த விசைப்படகு கர்நாடக - கேரள எல்லையான மங்களூரில் இருந்து 55 கடல்மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த ஏபிஎல் லீ ஹாவ்ரே (APL LE HAVRE) என்ற பெயர் கொண்ட கப்பல் நேற்று முன்தினம் (ஏப்ரல் 13 - செவ்வாய்க்கிழமை) சுமார் 2.30 மணி அளவில் மோதியதில் படகு மூழ்கி பேராபத்து ஏற்பட்டது.

விபத்து ஏற்படுத்திய கப்பல் ஆழ்கடலில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இதில் விசை படகில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் விழுந்தனர். படகில் இருந்த மூன்று மீனவர்கள் மரணம் அடைந்ததாகவும், இரண்டு மீனவர்கள் மீட்கப்பட்டதாகவும், மாயமான மீதமுள்ள மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றணி கூறுகையில், "கப்பல் மோதிய விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த இரண்டு மீனவர்களும், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மீனவரும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும், மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் என 14 மீனவர்கள் இருந்துள்ளனர். அதில் குளச்சலைச் சேர்ந்த அலெக்ஸாண்டர், தாசன் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணிக்தாஸ் ஆகிய மூன்று மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன், மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுனில்தாஸ் ஆகிய இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த டென்சன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கவேல், பாலமுருகன், பழனி மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேரை தேடும் பணி நடந்து வருகிறது. காலம்காலமாக மீனவர்களின் படகுகளை கப்பல் இடித்துத்தள்ளிவிட்டு தப்பிவிடும் நிலை உள்ளது. எனவே இதற்கு மத்திய அரசு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மாயமான மீனவர்களை, மூன்று விசைப்படகுகள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-ராஜ்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வியாழன் 15 ஏப் 2021