மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

அரியர் எழுதாதவர்கள் தேர்ச்சியில்லை!

அரியர் எழுதாதவர்கள் தேர்ச்சியில்லை!

கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் எதிரொலியாக இறுதியாண்டு கல்லூரி மாணவர்களைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதுபோன்று கட்டணம் செலுத்தி அரியர் தேர்வு எழுதுவதற்காகக் காத்திருந்த மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம்,  அரியர் தேர்வு ரத்து செய்யப்படுவது என்பதை  விதிமுறைகளுக்கு முரணானது என்று தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரியர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.  இதையடுத்து வழக்கின் விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி வழக்கு இன்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில், “ஆன்லைன் மூலமாக அரியர் தேர்வு நடத்தப்படும். தேர்வு நடத்துவதற்கான தேதிகள் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் அறிவிக்கப்படும். அதற்கு முன்பாக யுஜிசியிடமும் கலந்தாலோசிக்கப்படும். ஆன்லைன் மூலம் எழுதாதவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க மாட்டோம்” என்று  தெரிவிக்கப்பட்டது.

 தேர்வு நடத்த இருக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொள்வதாக யுஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அரசின் பதிலை ஏற்ற நீதிபதிகள்,  8 வாரத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் இதுகுறித்த அறிக்கையை ஜூலை 2ஆவது வாரத்திற்குப் பிறகு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், ஏற்கனவே ஆன்லைனில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

-பிரியா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வியாழன் 15 ஏப் 2021