மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

டெல்டா மாவட்டங்களில் உரத் தட்டுப்பாடு!

டெல்டா மாவட்டங்களில் உரத் தட்டுப்பாடு!

விலை உயர்வால் உர விநியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் கடுமையான உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திகழ்கிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் அதன் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட பரப்பளவைவிட 37 சதவிகிதம் கூடுதலாக நடந்தது. இதனால் நெல் கொள்முதல் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நடந்தது. இதேபோல் சம்பா, தாளடி சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட 10,000 ஏக்கர் வரை கூடுதலாக சாகுபடி நடந்தது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. ஆழ்துளை கிணறு மூலம் இந்த சாகுபடி நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 16,000 ஹெக்டேர் வரை கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் குறுவை சாகுபடி இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இதற்கு தேவையான விதை நெல் மற்றும் விவசாய இடுபொருட்கள் வாங்கி இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உரங்களும் வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் உரம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உரம் விலை அதிகரிக்கப்பட்டதால் புதிய விலை பட்டியல் அடங்கிய உரம் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் உரக் கடைகளில் ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டிருந்த பழைய உரம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

குறிப்பாக காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி., பொட்டாஷ் போன்ற அடி உரம் சப்ளை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் அடி உரங்கள் கிடைப்பதில்லை. இந்த உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் சரிவர கிடைக்கவில்லை. அதேநேரத்தில் டி.ஏ.பி, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்களின் விலை ஒரு மூட்டைக்கு 50 முதல் 60 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடம் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட போதுமான நீர் இருப்பதால் இந்த வருடமும் டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகிறார்கள்.

மேலும் முன்பட்ட குறுவையான கோடை நெல் சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் உரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் உரங்களின் விலை மிக, மிக அதிக அளவில் விற்கப்படுகிறது. இந்த விலையேற்றம் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல் உள்ளது. தமிழக அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை வேண்டும்" என்கின்றனர்.

இந்த நிலையில், மத்திய அரசு உயர்த்தியுள்ள 58 சதவிகித உரம் விலையைக் கண்டித்தும், விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு உரிய விலையை வழங்க வலியுறுத்தியும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்குத் தலைமை வகித்த அய்யாக்கண்ணு, “விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரு மடங்கு லாபம் தருவோம் என்று அரசு சொன்னது. ஆனால் தரவில்லை. அதே வேளையில் உர மூட்டை விலையை இருமடங்கு உயர்த்தி விட்டது. 1,200 ரூபாய்க்கு விற்ற உர மூட்டை இப்போது கடைகளில் 2,400 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

அதேபோல விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்றார்கள். ஆனால் பாதி நேரம்தான் மின்சாரம் இருக்கிறது. எங்களை வாழ விடு... அல்லது சாகவிடு என்ற நிலைப்பாட்டுக்கு வந்து விட்டோம். காவல்துறையை வைத்து எங்களை கொடுமை படுத்தக்கூடாது என்பதற்குத்தான் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வியாழன் 15 ஏப் 2021