மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்த பல்வேறு குழப்பங்கள், அந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சிக்கல்களைப் பார்க்கும்போது அது முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரிசிஸ் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து ‘எய்ம்ஸ்’ இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா விளக்கியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நிருபர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம், “பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக அது தொடர்ந்து பரவி வருகிறது. தங்களுக்கு கொரோனா வராது என இளம் வயதினர் திடமாக நம்புகின்றனர். ஆனால், அது தவறு. இந்தியாவில் கொரோனா பரவல் குறித்த பல்வேறு குழப்பங்கள், அந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சிக்கல்களைப் பார்க்கும்போது அது முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும். எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் இத்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம்” எனக் கூறியுள்ளார்.

அதே நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார அமைப்பின் உயரதிகாரி மரியா வான் கெர்கோவ், “இந்தியாவில் தொடர்ந்து ஏழு வாரங்களாகத் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகில் கொரோனா தொற்று ஒன்பது சதவிகிதம் அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது” என்று உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாததும், உருமாறிய கொரோனாவும்தான் இந்தியாவில் தொற்று அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்று ‘எய்ம்ஸ்’ இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.

“கடந்த பிப்ரவரி மாதம், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. உடனே மக்கள் மெத்தனமாகி விட்டனர். கொரோனா செயலிழந்து விட்டதாக நினைத்து, விதிமுறைகளைப் பின்பற்ற தவறினர்.

நோயை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். வெளியே போய் பார்த்தால், சந்தைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என எல்லாவற்றிலும் கூட்டமாக உள்ளது. இவைதான் நோயை பெரிய அளவில் பரப்பும் காரணிகள். முன்பெல்லாம், ஒருவருக்கு கொரோனா வந்தால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் சுமார் 30 சதவிகிதம் பேருக்குத் தொற்றைப் பரப்பி விடுவார்.

ஆனால், இப்போது ஒரு கொரோனா நோயாளி ஏராளமானோருக்கு நோயைப் பரப்பி விடுகிறார். அந்த அளவுக்கு கொரோனா பரவல் விகிதம் வேகமாக உள்ளது. இதற்கு எளிதாகவும், அதிகமாகவும் பரவக்கூடிய மரபணு உருமாறிய கொரோனாக்கள்தான் காரணம்.

ஒட்டுமொத்த மனித இனமே கடினமான தருணத்தில் உள்ளது. முக்கியமான வேலை இன்றி வெளியே செல்லாதீர்கள். கூட்டம் சேரக் கூடாது. கொரோனா விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுங்கள். அலட்சியமாகச் செயல்பட்டால், இதுவரை கிடைத்த பலன்களையும் இழக்க நேரிடும். நிலைமை கை மீறி சென்று விடும்.

நிலைமையைச் சரிசெய்யாவிட்டால், கொரோனா பரவல் விகிதம், நாட்டின் சுகாதார வசதிகள் மீது பெரும் கறையை உண்டாக்கி விடும். பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அது கொரோனா வருவதை தடுக்காது. இருப்பினும், கொரோனா வந்தால், நோய் தீவிரம் அடைவதை தடுப்பதுடன், இறப்பு விகிதத்தை குறைக்கிறது” என்று விளக்கியுள்ளார்.

-ராஜ்

.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 14 ஏப் 2021