மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

தடுப்பூசி தட்டுபாடில்லை, திட்டமிடலில்தான் பிரச்சினை!

தடுப்பூசி தட்டுபாடில்லை, திட்டமிடலில்தான் பிரச்சினை!

இந்தியாவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை, அவற்றை முறையாக விநியோகிப்பதற்கு திட்டமிடுவதில்தான் பிரச்சினை உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று(ஏப்ரல் 13) மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், “இதுவரை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 13 கோடியே 10 லட்சத்து 90,370 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், வீணாக்கியது உட்பட 11 கோடியே 43 லட்சத்து 69,677 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 1 கோடியே 67 லட்சத்து 20,693 டோஸ்கள் மாநில அரசுகளின் கைவசம் இருக்கும். இம்மாத இறுதிக்குள் மேலும் 2 கோடியே 1 லட்சத்து 22,960 டோஸ் மருந்துகள் மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

இதன் அடிப்படையில் பார்த்தால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை, அதற்கான திட்டமிடலில்தான் பிரச்சினை உள்ளது என்பது தெரிகிறது.

பெரிய மாநிலங்களுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறையும், சிறிய மாநிலங்களுக்கு 7 நாட்களுக்கு ஒருமுறையும் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தப்படும் அளவு ஒவ்வொரு மாவட்டத்திற்கு வேறுபடும். அதனால், இருப்பு உள்ள இடத்திலிருந்து தேவையான இடங்களுக்கு தடுப்பூசியை மாற்றிக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். நேற்று வரை நாடு முழுவதும் 10 கோடியே 85 லட்சத்து 33,085 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கேரளாவில் மட்டுமே தடுப்பூசிகள் வீணாக்கப்படுவதில்லை. மற்ற மாநிலங்களில் 8 முதல் 9 சதவிகிதம் வரை மருந்து வீணாக்கப்படுகிறது.

இந்தியாவில் முன்பு தினசரி அதிகபட்ச உயர்வு 94,372 ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 1,61,736 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மிகவும் கவலையளிக்கிறது. அதனால், கொரோனா பாதிப்பு அதிமுகள்ள 53 மாவட்டங்களுக்கு 53 மத்திய சுகாதாரக் குழுக்கள் சென்றுள்ளன” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் , நாட்டில் கடுமையான நிலைமை உருவாகி வருகிறது. சில மாநிலங்களில் நிலைமை மோசமாகி வருகிறது. இது நாடு தழுவிய பிரச்சினையாகும். பரிசோதனை, தடமறிதல் மற்றும் சிகிச்சையளித்தல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கவனமாக பின்பற்றவேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

ரெமெடிசிவிர் மருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, தீவிர நோயாளிகள் மற்றும் ஆக்ஸிஜன் தேவை உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இது மருந்தகங்களிலிருந்து வாங்கப்படக்கூடாது.

சில பகுதிகளில் ரெமெடிசிவிர் மருந்து பற்றாக்குறை இருப்பதாக தகவல் வந்தது. அதன் ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. தற்போது தேவையான அளவு இந்த மருந்து கிடைக்கிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெமெடிசிவரை தேவையான அளவு பார்த்து பயன்படுத்துமாறு மருத்துவர்களை கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்தார்.

வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 14 ஏப் 2021