மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்குக்கு இணையான கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் மகாராஷ்டிராவில் 60,212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பரவல் அதிகரித்து கொண்டே செல்வதால், மகாராஷ்டிராவில் இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், 15 நாட்கள் ஊரடங்கு போடுவதற்கான திட்டம் கையில் இருப்பதாகவும், மக்கள் அதற்காக தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என ஏற்கனவே அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 13) செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ”நாளை இரவு 8 மணி முதல் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும்.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே உள்ளூர் ரயில் மற்றும் பேருந்துகள், பெட்ரோல் பம்புகள், SEBI தொடர்புடைய நிதி நிறுவனங்கள் செயல்படும். கட்டுமானப் பணிகள் தொடரும். உணவகங்களில் பார்சல் மற்றும் வீட்டு விநியோகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. திரையரங்குகள், ஆடிட்டோரியங்கள், கேளிக்கை பூங்காக்கள், ஜிம்கள், ஷாப்பிங் மால்கள், விளையாட்டு வளாகங்கள், சீரியல், படப்பிடிப்புகளும் மூடப்படவுள்ளன. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 25 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். எந்தவொரு தேர்விலும் கலந்து கொள்ள வேண்டிய மாணவர்கள் ஹால் டிக்கெட்டை வைத்து ஒரு பெரியவருடன் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

"வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்" என்றும் "ஜனதா ஊரடங்கு உத்தரவை" கடைப்பிடிப்பதன் மூலம் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். "இந்த கட்டுப்பாடுகள் ஒருதலைப்பட்சமானவை அல்ல, மக்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

மேலும், ”இந்த காலக்கட்டத்திற்காக ரூ .5,476 கோடி நிவாரண நிதியையும் அறிவித்தார். உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளிகளுக்கு மாதத்திற்கு 3 கிலோ கோதுமை மற்றும் குடும்பத்தில் தலா ஒருவருக்கு 2 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படும். “சிவ போஜன் தாலி” என்ற உணவுத் திட்டத்தின் கீழ் மாதம் 2 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்படும்.

உரிமம் பெற்ற 5 லட்சம் வணிகர்களுக்கும், 12 லட்சம் ஆட்டோடிக்‌ஷா ஓட்டுநர்களுக்கும் இந்த மாதம் ரூ.1,500மும், பழங்குடியின மக்களுக்கு ரூ.2000 மும் வழங்கப்படும். இதன்மூலம் 12 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் பயனடையும்.

பதிவு செய்யப்பட்ட 12 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இந்த மாதம் தலா ரூ .1,500 வழங்கப்படும். 25 லட்சம் வீட்டுத் தொழிலாளர்களை மையமாக கொண்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய திட்டங்களில் சுமார் 35 லட்சம் பயனாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே ரூ .1000 நிதியுதவி தொகை கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

வினிதா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

புதன் 14 ஏப் 2021