மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி!

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி!

தேசிய நிபுணர் குழுவின் ஆலோசனையை ஏற்று வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.61 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 879 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்தியாவில் ஏற்கனவே ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருப்பதையடுத்து, மூன்றவதாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு நேற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் அனைத்திற்கும் அனுமதி வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு தேசிய நிபுணர் குழு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை ஏற்று, வெளிநாடுகளில் அவசர கால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்தும் முதல் 100 பேரை 7 நாட்களுக்கு கண்காணித்து, மருந்தின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி பெற, தடுப்பூசியை உள்நாட்டில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. தற்போது இந்த விதியிலிருந்து வெளிநாட்டில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு தடுப்பூசிகள், இந்தியாவில் அவரசகால அனுமதி பெற, ஆய்வு மேற்கொள்ள தேவையில்லை.

வரவேற்பு

இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஒப்புதலுக்கு ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி வாரிய தலைமைச் செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே ஆண்டொன்றுக்கு 85 கோடி டோஸ் அளவுக்கு தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படும் என்றும், அதன்மூலம் 42.50 கோடி பேர் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடு

இந்தியாவின் சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு கேரளாவுக்கு இதுவரை 56 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கியுள்ளது. அவற்றில் 48 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மீதமுள்ள தடுப்பூசிகள் முடிவடைந்துவிடும். அதனால், மேலும் 50 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, ஆந்திரா அரசும் தடுப்பூசி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

தமிழகத்தில், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி போட வருபவர்களை திரும்ப அனுப்பி விடுவதாக புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 13 ஏப் 2021