மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

லாக்டௌன் பதற்றம்... அவசரகதியில் அறுவடை... குப்பையில் கொட்டப்படும் தக்காளி!

லாக்டௌன் பதற்றம்... அவசரகதியில் அறுவடை... குப்பையில் கொட்டப்படும் தக்காளி!

கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படலாம் என்ற அச்சத்தால் அவசரகதியில் காய்கறி அறுவடையில் நீலகிரி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் தாளவாடி மலைப்பகுதியில் விலை வீழ்ச்சியால் தக்காளி குப்பையில் கொட்டப்பட்டு வருகிறது.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த (2020) ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தில் தொழில் முடக்கம் ஏற்பட்டு பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிர்த்தனர். அதிலும் குறிப்பாக விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் கால்நடைகளுக்கு உணவாக ரோட்டில் கொட்டினர். நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் விளைவித்த கேரட், பீட்ரூட் போன்றவற்றை இலவசமாக மக்களுக்கு வழங்கினர். எஞ்சியவற்றை ஆற்றிலும் ரோட்டிலும் கொட்டினர்.

கொரோனா பெருந்தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு வரும் என்ற அச்சத்தால் விவசாயிகள் அவசரகதியில் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள நீலகிரி மாவட்ட கேரட் விவசாயி ஒருவர், “ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே பூண்டு‌ விலை சரிய ஆரம்பிச்சது. மறுபடியும் லாக்டௌன் வருமோங்குற பயம் எல்லாத்துக்கிட்டயும் இருக்கு. பத்து இருபது நாட்கள்‌ கழிச்சு அறுவடை செய்ய வேண்டிய கேரட்டை இப்போவே அறுவடை செய்றோம். ஒரு நாளைக்கு ஐந்து டன் கேரட் போக வேண்டிய இடத்துக்கு 12 டன் கேரட் போகுது. பீட்ரூட், டர்னிப், நூல்கோல் என எல்லா காய்கறிக்கும் இதே சிக்கல்தான்.

கோயம்பேடு மார்கெட்ல சில்லறை விற்பனையைத்‌ தடை செஞ்சது இங்க வரைக்கும் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கு. கிடைக்கிற விலைக்கு போனா போதும். வேற வழியே இல்லாம அவசர அவசரமா அறுவடை செய்றோம்” என்கிறார்.

இதுகுறித்து ஊட்டியைச் சேர்ந்த மலை காய்கறி வியாபாரி ஒருவர், “இந்த ஒரு வாரமா வரத்து அதிகமாவே இருக்கு. உரிய பருவத்தை எட்டும் முன்னே சிலர் அறுவடை செஞ்சி கொண்டுவருவதைப் பார்க்க முடியுது. விலையைக் குறைச்சாலும் விற்பனை அதிகமில்லை” என்கிறார்.

இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் விலை வீழ்ச்சியால் தக்காளி குப்பையில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ளது தாளவாடி மலைப்பகுதி. இந்தப் பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இது தற்போது நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. ஆனால். இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் லாக்டெளன் பதற்றத்தால் ஒரு கிலோ 2 முதல் 3 ரூபாய்வரைதான் விலை கொடுக்கின்றனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து தாளவாடி விவசாயிகள், “தக்காளி மூன்று மாத பயிராகும். இதில் நாற்று நடுதல், களையெடுத்தல், உரம் மருந்து என ஏக்கர் ஒன்றுக்கே ரூ.60,000 வரை செலவு ஆகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. கொரோனா பயம், விளைச்சல் அதிகம் என வியாபாரிகள் காரணம் கூறி தக்காளியைக் குறைவான விலைக்குக் கேட்கின்றனர். இதனால் பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகைகூட கிடைப்பதில்லை. இதன் காரணமாக பழுத்த தக்காளியை பறித்து குப்பையில் கொட்டி வருகிறோம். சிலர் அப்படியே செடியில் பறிக்காமல் விட்டு விடுகிறோம். விவசாயத்தையே நம்பி இருப்பதால் கடனாளியாக உள்ளோம்” என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

செவ்வாய் 13 ஏப் 2021