மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

தடுப்பூசி தயக்கம் இன்னும் நீங்கவில்லை!

தடுப்பூசி தயக்கம் இன்னும் நீங்கவில்லை!

சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 55 சதவீதம் பேர் தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 2,67,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வார இறுதி நாட்களில் மெரினாவுக்கு செல்ல தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், வீடு வீடாக சென்று பரிசோதனை பணியும் நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பூசி குறித்து தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், அவர்களிடையே இருக்கும் தயக்கம் இன்னும் மாறவில்லை. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20 லட்சம் பேர் இருக்கின்றனர். ஆனால், இதுவரை 9 லட்சத்து 1 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மீதமுள்ள 55 சதவிகிதத்தினர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 9,40,145 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,308 ஆக உயர்ந்துள்ளது. இதில் 36 சதவிகிதத்தினர், அதாவது 17,098 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

அதனால் தடுப்பூசி குறித்தான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று, சென்னையில் 7,000 போலீசாருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3,300க்கு மேற்பட்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஆலோசனையில், அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தடுப்பூசி திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று 40.04 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,85,33,085-ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.61 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 879 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மேலும் பல தடுப்பூசிகளுக்கு அனுமதி தருமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

தட்டுப்பாடு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்காக வருபவர்களை கடந்த 3 நாட்களாக ஏதாவது ஒரு காரணம் சொல்லி மருத்துவமனை ஊழியர்கள் திரும்பி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. நேற்று தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், மேலும் ஒரு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதுமான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என அரசு தெரிவித்து வரும் நிலையில்,இரண்டு மாவட்டங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது.

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 13 ஏப் 2021