மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

திருப்பதி அர்ச்சகர்கள் 12 பேருக்குத் தொற்று: பக்தர்களுக்கு முற்றிலும் தடை?

திருப்பதி அர்ச்சகர்கள் 12 பேருக்குத் தொற்று: பக்தர்களுக்கு முற்றிலும் தடை?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமடைந்தபோது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு அர்ச்சகர் உயிரிழந்தார். இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயில் சில நாட்கள் மூடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக பரவி வருகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,765 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இறப்பு சதவிகிதமும் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் எண்ணிக்கை 23,000இல் இருந்து 15,000 ஆக குறைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (ஏப்ரல் 12) முதல் இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஏப்ரல் 31ஆம் தேதி வரை தினந்தோறும் 20,000 டிக்கெட்டுகள் என ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மற்றும் கல்யாண உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை உள்ளிட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த நிலையில் ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் தேவஸ்தான உயரதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 40,00 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மீதமுள்ள ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாநிலம் முழுவதும் கொரோனா பரவுவதைக் குறைக்க தடுப்பூசி செலுத்தப்படுவதை விரைவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கிராம மற்றும் வார்டு செயலகத்தில் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சித்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 11) ஒரே நாளில் 740 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) 265 பேர் கொரோனாவால் பாதிப்படைந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 11) திருப்பதியில் 437 பேரும், சித்தூர் 46, மதனப்பள்ளி 20, பாகாலா 17, சந்திரகிரி 10, புத்தூர் 10 என ஒரே நாளில் 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து திருப்பதியில் ஜெகன்மோகன் ரெட்டியின் தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-ராஜ்

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

திங்கள் 12 ஏப் 2021