மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி!

ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி!

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மூன்றாவது தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் களபணியாளர்களுக்கும், அடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கும், தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உலகளவில் தினசரி போடப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஒரு நாளைக்கு சராசரியாக 38,34,574 டோஸ்களுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்தே அமெரிக்கா உள்ளது.

இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றபோது, மூன்றாவதாக ரஷ்யா தயாரிக்கும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் ரெட்டிஸ் லேப் என்ற நிறுவனம் பரிசோதித்து வருகிறது. ரெட்டிஸ் லேப் நிறுவனம் இந்தியாவில் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது. இதையடுத்து, நிபுணர் குழு ஆய்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியானது ரஷியன் நேரடி முதலீட்டு நிதி (ஆர்டிஐஎஃப்) அமைப்புடன் சேர்ந்து ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸின் ஆய்வகங்கள், ஹெட்டிரோ பயோபார்மா, கிளாண்ட் பார்மா, ஸ்டெலிஸ் பயோபார்மா மற்றும் விச்ரோ பயோடெக் உள்ளிட்ட பல இந்திய மருந்து நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கவுள்ளது.

ஸ்புட்னிக் தடுப்பூசி உலகிலேயே முதல்முறையாக பதிவு செய்யப்பட்டாலும், தடுப்பு மருந்து மீதான நம்பிக்கை இல்லாததால், உலக ஆய்வாளர்கள் சந்தேகித்தனர்.

தற்போது, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கொரோனாவில் இருந்து மக்களை காப்பற்றுவதில் 92 சதவீதம் திறனுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இத்தடுப்பூசி 2, 3ஆம் கட்ட மனித சோதனைகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது .

கொரோனா இரண்டாவது அலை மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளை இந்தியா எதிர்கொண்டு வரும் நேரத்தில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 12 ஏப் 2021