மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

டாஸ்மாக்: விற்பனை நேரத்தைக் குறைக்க அரசு பரிசீலனை!

டாஸ்மாக்: விற்பனை நேரத்தைக் குறைக்க அரசு பரிசீலனை!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வருவதால் பொது இடங்களில் மக்கள் கூடுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பார்கள் மற்றும் மதுபானக் கடைகள் செயல்படும் நேரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோட்டல், டீக்கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பகுதிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மதுபானங்கள் விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளில் கூட்டமாக நின்று மது பிரியர்கள் மது வாங்குவதால் தொற்று பரவக்கூடும் எனக் கருதி அங்கு தடுப்புக்கட்டைகள் அமைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 5,320 மதுபானக் கடைகள் உள்ளன. 3,600 மது பார்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தொற்று பரவக் கூடாது என்பதற்காக டாஸ்மாக் நிறுவனம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள மதுபானக் கடைகள் முன்பு தடுப்புக் கட்டைகள் அமைத்து வரிசையில் நின்று மது வாங்குவதற்கு ஏற்பாடு செய்கிறது. நெரிசல் இல்லாமல் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து மதுவாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

அந்தந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் மூலமாக மது பிரியர்களுக்கு கொரோனா எச்சரிக்கை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. சென்னையில் 300-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளில் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கி உள்ளன. தடுப்பு கட்டைகள் அமைக்க இடவசதி உள்ள கடைகளில் இந்தப் பணி நடைபெற்று வருகின்றன.

இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் கிருமி நாசினி உள்ளிட்ட சுகாதார தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. பார்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணியும் நடைபெறுகிறது. மது பிரியர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க அனைத்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக மதுபானக் கடைகள் நேரத்தைக் குறைக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. தற்போது பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை கடைகள் செயல்படுகின்றன. அந்த நேரத்தை குறைப்பதன் மூலம் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் பார்கள் மற்றும் மதுபானக் கடை செயல்படும் நேரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

சனி 10 ஏப் 2021