மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

சென்னையில் மாஸ்க் அணிவது குறைவு!

சென்னையில் மாஸ்க் அணிவது குறைவு!

கொரோனா அதிகரித்து வரும் சூழலில் சென்னையில் முகக்கவசம் அணிவோரின் சதவிகிதம் குறைந்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 23 பேர் பலியாகினர். ஒவ்வொரு நாளும் தொற்று பரவல் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் சூழலில் மக்கள் அலட்சியமாக நடந்து கொள்வது வேதனை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் முகக்கவசம் அணியாததும், சமூக இடைவெளியை பின்பற்றாததும்தான் தற்போது அதிகரித்து வரும் கொரோனாவுக்கு காரணமாக இருக்கின்ற சூழலில் இன்னும் மக்கள் முகக்கவசம் அணிவதில் அலட்சியமாகதான் இருக்கின்றனர்.

முகக்கவசம் அணிவது குறித்து சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில், கடந்த அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் முறையாக முகக்கவசம் அணிந்தவர்களின் சதவீதம் குறைந்துள்ளது. குடிசை பகுதியில் 79% பேரும், இதர பகுதிகளில் 71% பேரும் முகக்கவசம் அணிவதில்லை. சென்னையில் உள்ள 9 மால்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 51 சதவிகிதம் பேர் முறையாக முகக்கவசம் அணியவில்லை என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நான்கு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பரிசோதனைகளை அதிகப்படுத்துவதன் மூலம் முன்கூட்டியே கொரோனா நோயாளிகளை அடையாளம் காணமுடியும். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் முழுமையாக தடுக்க முடியும்.

அதேசமயம், கொரோனா நோயாளிகளை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும். தினசரி நடத்தப்படும் பரிசோதனைகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

85 ஆயிரம் பேருக்கு பரிசோதனை என்பதை ஒரு லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

பாதிப்பு

கடந்த 10 நாட்களில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 20 மருத்துவர்கள் மற்றும் 6 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர், கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்து கொண்டவர்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக திருப்பதியில் இலவச தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

வினிதா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

சனி 10 ஏப் 2021