மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

சென்னை: தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்குமா?

சென்னை: தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்குமா?

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துகொண்டே வருகிறது. அதிலும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கடும் உக்கிரத்துடன் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை பெய்தாலும், பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் என நான்கு ஏரிகளின் நிலை என்ன, கோடையில் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமா என்ற கேள்விகளுக்கு, இந்த நான்கு ஏரிகளிலும் 75 சதவிகிதம் தண்ணீர் இருப்பு உள்ளதால் கோடைக்காலம் முழுவதும் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. இந்த நான்கு ஏரிகளிலும் 11.05 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம். கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

தற்போதைய நிலவரப்படி நான்கு ஏரிகளிலும் 8.705 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 75 சதவிகிதமாகும். கடந்த ஆண்டு இதே நாளில் 6.341 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டிஎம்சி ஆகும். இதில் தற்போது 1.901 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் 1.081 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது அந்த ஏரியில் 762 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியின் கொள்ளளவு 3.300 டிஎம்சி ஆகும். இதில் தற்போது 3.024 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3.018 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டிஎம்சி ஆகும்.

இந்தத் தண்ணீரைக்கொண்டு கோடைக்காலம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி சென்னையில் குடிநீர் விநியோகம் செய்யலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஐந்தாவது ஏரியான கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியில் 483 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி ஆகும். பூண்டி ஏரிக்கு அடுத்த மாதம் தொடக்கத்தில் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடின்றி அனைத்து இடங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

-ராஜ்

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

வெள்ளி 9 ஏப் 2021