மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

அரக்கோணம் இரட்டை கொலை: தேர்தல் முன்விரோதம் காரணமா?

அரக்கோணம் இரட்டை கொலை: தேர்தல் முன்விரோதம் காரணமா?

திருமணமாகி 10 நாட்களான புதுமாப்பிள்ளை உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த சித்தம்பாடி கவுதம நகர் பகுதியில் சோகனூரை சேர்ந்த அர்ஜுன் (20), சூர்யா (25) மற்றும் அவரது நண்பர்கள் நேற்றிரவு மது குடித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது பெருமாள் ராஜப்பேட்டையை சேர்ந்த ஒருவரை மது குடிக்க அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் அங்கு சென்ற போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆத்திரமடைந்த ஒருவர், பீர் பாட்டிலால் பெருமாள் ராஜப்பேட்டையில் இருந்து வந்த வாலிபரின் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் போன் செய்து அவரது நண்பர்களை அங்கு அழைத்திருக்கிறார். பதிலுக்கு எதிர்தரப்பை சேர்ந்தவர்களும் தங்கள் ஆதரவாளர்களை அழைத்திருக்கின்றனர். இதனால் அங்கு கோஷ்டி மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாட்டில் மற்றும் கத்தி, கட்டைகளால் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதில் சோகனூரை சேர்ந்த சூர்யா, அர்ஜூன், மதன், சவுந்தரராஜன் ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சூர்யா, அர்ஜூன் ஆகிய 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

காயமடைந்த மற்ற 2 பேரும் திருத்தணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலையான சூர்யாவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. அர்ஜூனுக்கு திருமணமாகி 10 நாட்கள்தான் ஆகிறது. புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த தகராறு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை மற்றும் தேர்தல் கோஷ்டி மோதல் தகவல் சோகனூர் மற்றும் செம்பேடு பகுதியில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க வேடல், குருவராஜப்பேட்டை, பெருமாள்ராஜப்பேட்டை பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

போலீஸ் அதிகாரிகள் சித்தம்பாடி கவுதமநகர் பகுதிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு சோகனூர் சர்ச் பகுதியில் அமர்ந்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் சிவகுமாரின் அறிவுறுத்தலின்படி மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான பெருமாள் ராஜப்பேட்டையைச் சேர்ந்த மதன்(37), அஜித்(24) ஆகிய இருவரையும் பிடித்துள்ளனர். தொடர்ந்து இதில் தொடர்புடையவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "சோகனூரில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் சாதிவெறியர்கள் இந்தச் செயலைச் செய்துள்ளனர். ஏப்ரல் 10ஆம் தேதி மாவட்டத் தலைமையகத்தில் இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்று கூறியிருக்கிறார்.

தேர்தல் தொடர்பான தகராறு சேலம் மாவட்டத்திலும் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை முருகன் நகரைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் உமாபதி ( 37).

இவர் தாரமங்கலம் ஒன்றிய பா.ம.க. விவசாய அணி தலைவராக உள்ளார். கடந்த 2 வருடமாக கட்சி பணி செய்யாமல் ஒதுங்கி இருந்து வந்தார். தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் உமாபதி தி.மு.க. வேட்பாளர் ராஜேசுக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த பா.ம.க.வைச் சேர்ந்த சிலர் உமாபதி வீட்டிற்கு நேற்று இரவு சென்று கட்சி பணிக்கு வராமல் தற்போது தி.மு.க.வுக்கு ஏன் வேலை செய்தாய்? என்று கேட்டிருக்கின்றனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆத்திரம் அடைந்த பா.ம.க.வினர், உமாபதி வீட்டிற்குள் புகுந்து வீட்டை அடித்து நொறுக்கி, அவரையும் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த உமாபதி ரத்த வெள்ளத்தில் வெளியில் ஓடினார். இதையறிந்த அக்கம், பக்கத்தினர் மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உமாபதியை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

-சக்தி பரமசிவன்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 8 ஏப் 2021