மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

நெல்லையில் அடுத்தடுத்து மூன்று கொலை!

நெல்லையில் அடுத்தடுத்து மூன்று கொலை!

திருநெல்வேலி அருகே அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவத்தால் மூவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குளம் அருகேயுள்ள சீதபற்பநல்லூரைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி மகன் சிறுத்தை என்ற செல்வம்(32). இவருக்கும் முக்கூடல் அருகேயுள்ள நந்தன்தட்டையைச் சேர்ந்த புலவேந்திரன் மகள் மஞ்சு என்ற உச்சிமகாளி(28) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு மணிகண்டன்(8), முகேஷ்(4), புவனேஷ்(2) என 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வம், தனது மாமனார் ஊரிலேயே கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறாராம். தனது மகள் உள்ளிட்ட 5 பேரையும் புலவேந்திரன் பராமரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சிறுத்தை என்ற செல்வம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததுடன் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை புலவேந்திரன் தனது பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டு இருந்தபோது, செல்வம் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, என் குழந்தைகளைத் தூக்கி விளையாடக் கூடாது எனக் கூறி குழந்தைகளை தூக்கி கொண்டாராம். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த முதியவர் வீட்டில் இருந்த அரிவாளால் செல்வத்தை சரமாரியாக வெட்டியதில் செல்வம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைக் கண்ட மஞ்சு தனது தந்தையை திட்டியுள்ளார். மேலும் கோபமுற்ற புலவேந்திரன், தனது மகளையும் வெட்டியுள்ளார். அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, இருவரையும் கொலை செய்த முதியவர் பாப்பாக்குடி போலீஸில் தாமாக சரணடைந்தார்.

உடல்களை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று மற்றொரு பகுதியிலும் கொலை சம்பவம் நடந்துள்ளது. திருநெல்வேலி அருகே ஆலங்குளத்தில் கணவர் , மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால்(28). அதே பகுதியைச் சேர்ந்த மல்லிகா(23) என்ற பெண்ணை 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் தம்பதியர் ஆலங்குளம் அண்ணாநகர் 1வது தெருவில் வசித்து வந்தனர். ராஜகோபால் முத்துகிருஷ்ணபேரியில் உள்ள சலூன் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மல்லிகா வீட்டுக்கு அருகில் உள்ள பொன்ராஜ் என்பவரது கேபிள் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு முறை மல்லிகா, தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை, மல்லிகா தனது அலுவலகத்தில் தனியாக இருந்த போது, கத்தியுடன் உள்ளே புகுந்த ராஜகோபால் அவரை கத்தியால் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டுச் சென்ற பக்கத்து வீட்டைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி மாரியம்மாளையும்(45) ராஜகோபால் குத்தியுள்ளார். இதில் இரு பெண்களும் பலத்த காயமடைந்தனர். இருவரும் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இரவில் மல்லிகா உயிரிழந்தார். இது குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜகோபாலைத் தேடி வருகின்றனர்.

-சக்தி பரமசிவன்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

வியாழன் 8 ஏப் 2021