மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

அனைவரையும் மிரட்டும் கொரோனா: பணியிடங்களில் தடுப்பூசி!

அனைவரையும் மிரட்டும் கொரோனா: பணியிடங்களில் தடுப்பூசி!

அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தி தகுதியுடைய 100 பேருக்குத் தடுப்பூசி போடலாம். வயது வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.28 கோடியை கடந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பணியாளர் மற்றும் பயிற்சி துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து வடகிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும், பிரதமர் அலுவலகம், பணியாளர், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் நேற்று (ஏப்ரல் 7) ஆய்வு செய்தார்.

அப்போது பேசிய அவர், "45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மத்திய அரசு பணியாளர்களும் தடுப்பூசியை விரைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மத்திய அரசு பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

வீட்டிலிருந்தே பணிபுரிவதற்குப் பணியாளர் மற்றும் பயிற்சி துறை உருவாக்கியுள்ள செயல்முறை மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. ஆன்லைன் மூலம் வேலை நாட்களிலும், விடுமுறை தினங்களிலும் பணிபுரிவதால், பல நேரங்களில் பணித்திறன் சாதாரண நேரங்களை விட அதிகமாக இருக்கிறது.

தடுப்பூசி போட்ட பின்னரும், அடிக்கடி கைகளை கழுவுதல், முகக்கவசத்தைப் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சரியான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு பணியாளர்கள் பின்பற்ற வேண்டும்" என கூறினார்.

தடுப்பூசி

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிர அரசு தவறியுள்ளது எனக் குற்றம் சாட்டிய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை என வரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை எங்கும் ஏற்படவில்லை. சில மாநில அரசுகள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக, மக்களிடம் கொரோனா பீதியை ஏற்படுத்தி வருவதாகவும், போதுமான தடுப்பூசிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் கவலை

நேற்று(ஏப்ரல் 7) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றின் விசாரணையில், தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் காணொலி மூலமாக ஆஜராகி இருந்தார். அப்போது, அவரிடம், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தீவிர பிரச்சினையாகக் கருத வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

மேலும், சூழல் மோசமாக இருக்கிற இந்த நிலையில், எவ்விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் இல்லை. பொதுமக்களும் முகக்கவசம் அணிவதில்லை, தனி மனித இடைவெளியும் பின்பற்றுவதில்லை என்பது கவலையளிக்கிறது எனத் தெரிவித்தனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், நோய் தாக்கத்தை குறைக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரை மற்றும் நோய் தடுப்புக்குத் தேவையான மாற்றத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

திருப்பதி தரிசனம்

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. .

கொரோனா பரவல் காரணமாக இலவச தரிசன டிக்கெட் கடந்த ஒரு வாரமாக 23,000 டிக்கெட்டுகளில் இருந்து 15,000 ஆக குறைக்கப்பட்டது.

வருகிற 11ஆம் தேதி வரை இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறை மற்றும் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் வழங்கப்படும். இந்த டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தர்கள் 12ஆம் தேதி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 11ஆம் தேதி இரவு முதல் தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்படும். இதையடுத்து, ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வதந்தியே

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி இதுவரை எந்த திட்டமும் இல்லை. 7ஆம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்.

தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் வதந்தியே. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அத்தியாவசிய மற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நக்மாவுக்கு மீண்டும் தொற்று

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகை நக்மா தன்னுடைய ட்விட்டரில்,”சில தினங்களுக்கு முன்புதான் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்து கொண்டேன். ஆனால், தற்போது பரிசோதனையில் மீண்டும் கொரோனா தொற்று எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

வியாழன் 8 ஏப் 2021