மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

சிறப்புக் கட்டுரை: பாகுபாடு இல்லாத நலமான உலகம்? - ஐநாவின் கனவு நனவாகுமா?

சிறப்புக் கட்டுரை: பாகுபாடு இல்லாத நலமான உலகம்? - ஐநாவின் கனவு நனவாகுமா?

ஏப்ரல் 7, உலக நல நாள். இதையொட்டி உலக சுகாதார (நல) நிறுவனம், இந்த ஆண்டு பாகுபாடற்ற சிறப்பான ஆரோக்கியமான உலகத்தைப் படைக்க அறைகூவல் விடுத்துள்ளது.

ஐ.நா. அமைப்பைச் சார்ந்த உலக சுகாதார நிறுவனமானது ஆண்டுக்கு ஒரு நோக்கத்தை முன்வைத்து, அந்த ஆண்டு முழுவதும் அதற்கான பணிகளை முன்னெடுப்பது புதியது அல்ல. அந்த வரிசையில் இந்த ஆண்டில், ‘பாகுபாடற்ற சிறப்பான ஆரோக்கியமான உலகத்தைக் கட்டமைப்போம்’ என்பதை உ.சு.நி. முன்வைத்திருக்கிறது.

ஏன் இந்த முழக்கம் என்பதற்கான சிறு விளக்கத்தையும் அது கூறியிருக்கிறது. அதன்படி, இந்த உலகத்தில் குறிப்பிட்ட மக்கள் மட்டும், அவர்களின் பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, வேலை, வயது ஆகியவற்றின் காரணமாக, மற்றவர்களைவிட சிறப்பான சிகிச்சைவசதிகளைப் பெறக்கூடியவர்களாக இருக்கின்றனர்; அதன் மூலம் அவர்களுக்கு நலமான வாழ்க்கை கிடைத்துவருகிறது.

வேறு சில மக்கள் பிரிவினருக்கோ அன்றாட வருமானத்தை ஈட்டுவதே பெரும்பாடாக இருக்கிறது. அவர்களின் குடியிருப்பு மற்றும் கல்விவாய்ப்பு படுமோசமான நிலைமையில் இருக்கின்றன. வேலைவாய்ப்புகள் சொற்ப அளவில்தான் கிடைக்கின்றன. (பெண்களுக்கு) பாலினரீதியிலான பெரிய அளவில் பாகுபாடும் காட்டப்படுகிறது. பாதுகாப்பான சுற்றுச்சூழல் இல்லாமலோ அல்லது அப்படியான சூழலை அனுபவிக்க வாய்க்காமலோ கணிசமானவர்கள் இருக்கின்றனர். தூய்மையான குடிநீர், நல்ல காற்று, உணவுப் பாதுகாப்பு, சுகாதார வசதிகள் கிடைக்காமல் இருப்போரும் உண்டு. இவற்றின் காரணமாக, தேவையில்லாத கஷ்டங்கள், தவிர்க்கக்கூடிய நோய்கள், அற்பவயது மரணங்களை ஏராளமானவர்கள் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது, சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பெரும் பாதகத்தை ஏற்படுத்துகிறது.

இது நியாயமற்றது மட்டுமல்ல, தவிர்க்கக்கூடியதும் ஆகும்.

ஆகையால்தான், ஒவ்வொருவரும் நலமாக வாழ்வதற்கான வாழ்க்கையையும் வேலைச்சூழலையும் அரசுத் தலைவர்கள் உறுதிப்படுத்தவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, அனைத்து தரப்பு மக்களுக்கும் எங்கு, எப்போது மருத்துவவசதி தேவைப்படுகிறதோ அங்கு, அப்போது உரிய வசதி கிடைக்கச்செய்வதை அரசுத்தலைவர்கள் உறுதிப்படுத்தவேண்டும்; அத்துடன், சுகாதார வசதி கிடைப்பதில் நிலவும் சமமற்ற தன்மையை அவர்கள் தொடர்ந்து கண்காணித்துவரவேண்டும் என்கிறது உ.சு.நிறுவனம்.

கோவிட் 19 பெருந்தொற்றானது எல்லா நாடுகளையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. ஆனால், ஏற்கெனவே பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்த மக்கள் பிரிவினரே இதில் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை அதிக அளவில் எதிர்கொண்ட இவர்களுக்கு, தரமான மருத்துவவசதி குறைவாகவே கிடைத்துவரும் நிலைமைதான் காணப்படுகிறது. இத்துடன், கொரோனா கட்டுப்பாட்டுக் காலத்தில் விதிக்கப்பட்டுவரும் விதிமுறைகளால் கணிசமானவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

- இதுதான் உலக சுகாதார நிறுவனம், நேற்றைய சுகாதார நாள் செய்தியாக வெளியிட்டிருப்பது.

இதற்கு பெரிய அருஞ்சொற்பொருள் விளக்கம் எதுவும் தேவை இல்லை. ஒவ்வொரு வாக்கியமும் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடக்கும் சுகாதாரச் சீர்கேடான நிலையையும் அதேசமயத்தில் அதற்கு நேர்மாறான அதிநவீனமான சுகாதார சொர்க்கம் போன்ற வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.

உ.சு.நிறுவனமே ஒப்புக்கொண்டிருக்கும் ஒரு பேருண்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மனிதர்களாகப் பிறந்தவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைத்ததையும் கிடைக்காமல் போனதையும் சில மாதங்களுக்கு முந்தைய நாள்கள், நமக்கு தெள்ளத் தெளிவாகக் காட்டிவிட்டுச் சென்றுள்ளன.

கோடிகளில் வாழ்க்கை நடத்துவோருக்கு தேடிவந்து அவசர ஊர்திகளில் அள்ளிப்போட்டுக்கொண்டு அப்போலோ மருத்துவமனைகளில் சிகிச்சை தரப்பட்டது ஒரு பக்கமும். கோடிக்கணக்கான மக்கள்கூட்டத்தில் வாழும் மனிதர்களை, அவரின் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பீதியூட்டி, கவனிக்க யாருமில்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களை, வேதனைக்கும் சோதனைகளுக்கும் ஆளாக்கி, 15 நாள் வேலையைக் கெடுத்த காட்சிகள் இன்னொரு பக்கம்.

காசு பணம்தான் இந்த மாதிரியான பாகுபாட்டுக்குக் காரணமா என்றால், இல்லை என நிரூபித்தது, இத்தாலி. சோசலிச சோவியத் ஒன்றியம், மா-ஓ-சேதுங் காலத்து சீனம், சேகுவேரா - பிடல் காஸ்ட்ரோவின் கியூபா போன்ற மக்கள் நலனுக்கான அரசுகளைப் போல, அதற்கு ஈடுதரும் வகையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஐரோப்பிய நாடுகளில் அனைவருக்குமான பொதுசுகாதார வசதி கொண்டுவரப்பட்டது. பிரிட்டன் உள்பட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அடிப்படையான சுகாதார வசதிகள், கனவான்களுக்கும் கனவுகளோடு இருப்பவர்களும் பொதுவானவையாகவே இருக்கின்றன. அந்த நாட்டின் குடிமகன் எனும் தகுதி இருந்தால், எவருக்கும் சுகாதாரமும் மருத்துவ வசதிகளும் அங்கு பொதுவானதும் தரமானதும் என்பதில் எந்தக் குறைபாடும் இருப்பது அரிது.

அப்படியான பின்னணியிலும் இத்தாலியில் கொரோனா தாக்கி முதியவர்கள் கொத்துக்கொத்தாக மடிந்தபோது, அவர்களைப் புதைப்பதற்கு இடமில்லாமல், அண்டை நாடுகளை அணுகவேண்டிய அவலநிலைக்கும் சென்றார்கள். இது ஒரு பெரும் மனிதப் பேரவலம்.. அப்படித்தான் நினைக்கிறது, மானுட நேயம் கொண்ட உலக மருத்துவ சமூகம். வயதானவர்கள் செத்துப்போனால் என்னதான் செய்வது? போனால்தான் போகட்டுமே எனும் ஹிட்லரை நினைவூட்டும் சிந்தனையும் ஆகச்சிறந்த கனவான்களின் ஐரோப்பாவில் ‘இளித்தது’. வேறு எப்படி அதைச் சொல்ல?

வயதின் அடிப்படையிலான இப்படியான பாகுபாட்டையும் கூடாது என்கிறது, இந்த ஆண்டு உ.சு.நிறுவனத்தின் இலக்கு வாசகம். நகரமயம் எனும் பெயரில் நாகரிகத்தை நோக்கிய வேகமான பயணத்தில், முதியவர்களின் சுகாதாரத்தையும் நலத்தையும் கண்டிப்பாக கவனமெடுத்து, அவர்களைப் பராமரிக்கவேண்டும் என வலியுறுத்துகிறது, இந்த ஆண்டின் இலக்கு வாசகம்.

வெள்ளையாக இருப்பவன் சொல்வது உண்மை எனும் ஏமாற்றுமொழி அம்பலப்பட்டதும், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்காவில் அரங்கேறியது. மேலைநாடு என்றாலும் ஐரோப்பிய நாடுகளின் சுகாதார வசதிகளுடன் அவ்வளவு வேண்டாம் உலக வரைபடத்தில் பெரும் வல்லரசான அமெரிக்காவின் அடியில் சிறு துண்டுகளைப் போல இருக்கும் கியூபாவைவிட, கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் எத்தனையோ மடங்கு மோசமான அளவிலேயே அரசாங்கத்தின் செயல்பாடு இருந்தது, பலருக்கும் நினைவிருக்கும். இன்னும் வெள்ளை இனவெறி மிச்சம்மீதி இருக்கும் அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டதும் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்ததும் மறக்கமுடியாத பாகுபாட்டின் உச்சம்.

ஆகச் சிறந்த ஜனநாயக நாடாகச் சித்திரிக்கப்படும் அமெரிக்காவிலேயே இவ்வளவு மோசம் என்றால், சாதி, மதம் போன்ற பாகுபாடுகள் மலிந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில், பிறப்பின்படியான சுகாதார வசதிமறுப்பும் சர்வசாதாரணமாக இருந்துவருகிறது. இன்னும் பின்தங்கிய நாடுகளின் நிலைமை இதைவிட படுமோசமாகவே இருக்கிறது.

நாட்டுக்கு நாடு மோசமாக இருப்பதைப் பட்டியல்போட்டு பகுப்பாய்வுசெய்யும்படியான நிலைமையை மாற்றக்கோருகிறது, உ.சு.நிறுவனத்தின் ‘பாகுபாடற்ற சிறந்த - ஆரோக்கியமான உலகைப் படைக்கும்’ நோக்க முழக்கம்.

‘அனைவருக்கும் சமமான, தரமான பொது சுகாதார, மருத்துவ வசதிகள் கிடைக்கும்படி செய்வோம்’ என்பதாகவும் இதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.

இந்த ஆண்டின் இந்தக் கருப்பொருள் தொடர்பாக, தொடர்ச்சியாக நாம் இங்கு உரையாடுவோம்.

- இர.இரா.தமிழ்க்கனல்

கட்டுரையாளர் : பத்திரிகையாளர் மற்றும் ஆட்சியியல் விமர்சகர். கல்வி, நலவாழ்வு, பொதுவிநியோகம், மின்சாரம், குடிநீர் வழங்கல், வளர்ச்சி அரசியல் போன்றவை தொடர்பான பொதுக்கொள்கைகள் குறித்து தனிகவனம் செலுத்தி எழுதி வருகிறார்.

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

வியாழன் 8 ஏப் 2021